PUBLISHED ON : மே 09, 2026

நாகர்கோவில், டி.வி.டி. உயர்நிலைப் பள்ளியில், 1954ல், 8ம் வகுப்பு படித்தேன். அப்போது, எங்கள் வகுப்பாசிரியராக இருந்தவர், சூசை மைக்கேல்.
நாங்கள் படிக்கும் காலத்தில், 9 - 11ம் வகுப்பு வரை, மாதம் ஆறு ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சிறு தொகையை அந்த காலத்தில் செலுத்த முடியாமல், பல மாணவர்கள் அபராதத்துடன், அடுத்த மாதம் செலுத்துவர். ஆண்டு இறுதியில் நடக்கும் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவதற்கும், மாணவர்கள் பணம் செலுத்துவர்.
இதில் உள்ள சிரமத்தை உணர்ந்த வகுப்பாசிரியர், மாணவர்களின் செலவுக்காக பெற்றோர் தரும் பணத்தை, சேமித்து வைக்கும் பழக்கத்தை கற்றுத் தந்தார். பள்ளி ஆண்டு விழாவிற்கு செலுத்த வேண்டிய பணத்தை எளிதாக சேமிப்பதற்காக, புதிய திட்டத்தையும் அவர் அறிமுகம் செய்தார்.
இதன்படி, ஒவ்வொரு வாரமும் மாணவர்கள் நாலணா செலுத்த வேண்டும். பெற்றோருக்கும், குழந்தைகளின் செலவிற்கு, 25 காசு தருவது எளிது. இதை சேகரிக்கும் பொறுப்பு, வகுப்பு தலைவனிடம் ஒப்படைக்கப்பட்டு, அவன் பெயரில் வங்கிக் கணக்கையும் ஆரம்பித்து தந்தார். வகுப்பு தலைவன் சேகரித்து தரும் பணத்தைப் பெற்று, அதை வங்கி கணக்கில் செலுத்தினார்.
ஆண்டு இறுதியில் கணிசமான தொகை சேர்ந்தது. ஆண்டு விழாவை சிறப்பாக நடத்தி, பள்ளியில் முதல் முறையாக, வகுப்பாசிரியருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
தற்போது என் வயது, 84. வகுப்பாசிரியர் சூசை மைக்கேல் சொல்லித்தந்த, சிறுகச்சிறுக சேமிக்கும் பழக்கம், என் வாழ்க்கையை எளிதாக மாற்றியது. சேமிப்பை கடைப்பிடித்து வருவதால், அவரது ஆசியில், இப்போதும் பொருளாதார நிறைவுடன் சுகமாக வாழ்கிறேன்.
- எஸ்.பூதலிங்கம் பிள்ளை, நாகர்கோவில். தொடர்புக்கு: 94867 99327
