
கண்ணாடியால் வேயப்பட்டிருந்தது அருங்காட்சியகம்.
அதற்குள் பாய்ந்து ஓடியது நாய்.
உட்சுவர், மேற்கூரை, கதவு, மாடிபடி என எங்கும் கண்ணாடியின் பிரதிபலிப்பு தனித்துவமாய் தெரிந்தது.
கண்ணாடியில் தன் உருவத்தை கண்டதும் வியப்பில் உறைந்து நின்றது நாய். அதன் பிம்பத்தையே பிரதிபலித்ததால் ஆங்காங்கே நாய்கள் இருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. அதைக் கண்டு பற்களை காட்டி குரைத்தது. பின், வெறித்தனமாக ஊளையிட்டது.
பிரதிபலிப்பு பல மடங்கு அதிகரித்தது.
இன்னும் ஆவேசமானது நாய். கண்ணாடி பிரதிபலிப்புகளை பார்த்து தீவிரமாய் சண்டையிட்டது.
மறு நாள் -
உயிரற்ற நாயை அருங்காட்சியகத்துக்குள் கண்டனர் காவலர்கள்.
யாரும், அந்த நாய்க்கு தீங்கு செய்யவில்லை. சொந்த பிரதிபலிப்பை புரிந்து கொள்ளாமல் போராடி இறந்திருந்தது.
பட்டூஸ்... உலகை புரிந்து எதற்கும் அஞ்சாமல் நல்லவற்றை பார்ப்போம்; பன்மடங்கு நன்மைகள் தேடி வரும்!
சவுமியா சுப்ரமணியன்