தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/காட்டிக்கொடுத்த காகம்!

காட்டிக்கொடுத்த காகம்!

காட்டிக்கொடுத்த காகம்!


PUBLISHED ON : ஜன 31, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 31, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லாளபுரம் எனும் ஊரை, மாயவனார் என்ற மன்னர் ஆண்டு வந்தார்.

அரண்மனையின் வெளிப்புறத்தை சுற்றி, நிறைய மரங்கள் இருந்தன.

அதில் ஒரு மரத்தில், காகம் ஒன்று கூடு கட்டி வாழ்ந்து வந்தது.

காகம், எப்போதும் கத்திக் கொண்டிருக்கும். மன்னர் வெளியே செல்ல கிளம்பும் சமயங்களிலும் கத்துவதுண்டு. அதை மன்னர் அபசகுனமாக நினைத்தார். காகத்தை விரட்ட சேவகர்களுக்கு கட்டளையிட்டார்.

சேவகர்கள், எப்படி விரட்டியடித்தாலும், காகம் மீண்டும் வந்து மரத்தில் அமர்ந்து, கத்துவதை நிறுத்தவில்லை.

மன்னருக்கு பெரும் எரிச்சலாக இருந்தது. காகத்தை என்ன செய்யலாமென யோசித்தார்.

ஒருநாள் இரவு, மன்னர் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தபோது, காகம் பெரும் குரல் எடுத்து கத்த துவங்கியது.

உறக்கம் கலைந்த மன்னர், சேவகர்களை அழைத்து, 'காகத்தை விரட்டுங்கள்... முடியவில்லை என்றால், அதை கொன்று விடுங்கள்...' என்றார்.

காகத்தை விரட்ட சென்றனர், சேவகர்கள்.

அந்த இருள் சூழ்ந்த நேரத்தில், மரத்தின் மீது காகம் அமர்ந்திருப்பதே தெரியவில்லை. அது பறந்து செல்லும் சத்தத்தை கேட்டு, சேவகர்கள் விரட்டிச் சென்றனர். காகம், மற்றொரு புறம் பறந்து போய், இன்னொரு மரக்கிளையில் அமர்ந்தது.

'இந்த காகம் நமக்கு போக்கு காட்டுகிறதே...' என, எரிச்சல் பட்டனர், சேவகர்கள்.

காகம் மீண்டும் கத்தியது.

சேவகர்கள் அதை நெருங்கிய சமயம், அந்த இருளில், ஒரு புதர் மறைவில் இருந்து இரண்டு மனிதர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்கள் இருவரையும் வளைத்துப் பிடித்தனர், சேவகர்கள்.

இருவரிடமும், குத்துவாள் இருந்தது.

இருவரையும் கைகளை கட்டி, இழுத்து வந்து, மன்னரின் முன் நிறுத்தினர்.

'இவர்கள் இருவரும், ஏதோ சதி திட்டத்தோடு அரண்மனைக்குள் புகுந்துள்ளனர். இருவர் கையிலும் கூர்மையான ஆயுதம் உள்ளது' என்றான், சேவகன்.

அதிர்ந்து போனார், மன்னர். 'இருவரையும் சிறையில் அடையுங்கள். காலையில் விசாரித்துக் கொள்ளலாம்' என்றார், மன்னர்.

'அந்த காகம் மட்டும் கத்தாமல் இருந்திருந்தால், இந்த கயவர்களை பிடித்திருக்க முடியாது... காகம் கத்தியது கூட ஒரு வகையில் நல்லது தான் மன்னா...' என்றான், ஒரு சேவகன்.

மன்னருக்கும், அது சரி என்றே பட்டது.

'நீங்கள் சொல்வது உண்மையே... இனி காகத்தை விரட்ட வேண்டாம்; விட்டுவிடுங்கள்...' என்றார், மன்னர்.

சுட்டீஸ்... நாம் அர்த்தமின்றி வெறுக்கும் எதுவும், சில சமயங்களில் நமக்கு உபயோகப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஜி.சுந்தரராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us