
அன்புள்ள அம்மா,
என் பள்ளிப்படிப்பு முடிந்த ஓரிரு ஆண்டுகளில், எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். இப்போது எனக்கு ஒரு மகன், மகள் இருக்கின்றனர். இருவரும் பள்ளியில், ஐந்தாம் வகுப்பும், மூன்றாம் வகுப்பும் படிக்கின்றனர். பொதி கழுதை மாதிரி, பின் முதுகில் புத்தகங்களையும், நோட்டு புத்தகங்களையும் சுமக்கின்றனர்.
ஆனால், அதுவல்ல என் பிரச்னை. இரு குழந்தைகளுக்கும் வீட்டுப்பாடங்களும், மொபைல் போனும் தவிர வேறு எதுவும் தெரிவதில்லை.
நான் படித்த காலத்தில், காலை 9:00 முதல் மாலை 4:00 வரை பள்ளி நேரம். ஒவ்வொரு வகுப்பிற்கும், 40 நிமிடங்கள். அப்போது ஒழுக்கக் கல்வி, நன்னெறி போதனை வகுப்புகள் இருந்தன. அவை, மாணவர்களிடம் நல்ல குணங்களை வளர்த்தன.
கை வேலை, பாட்டு, நடனம், ஓவியம் என, எத்தனையோ கற்றுத்தரப்பட்டன. முக்கியமாக, விளையாட்டு வகுப்புகள் இருந்தன. விளையாட்டு மைதானங்கள் இருந்தன. மைதானத்தை சுற்றி ஓட வைப்பதும், வாலிபால், கூடைப்பந்து, பூப்பந்து, டென்னிஸ், கிரிக்கெட், கபடி என, மாணவ - மாணவியருக்கு எத்தனையோ விளையாட்டுகள் இருந்தன.
இப்போது விளையாட்டு என்றால் என்னவென்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். பள்ளியிலோ, வீடுகளின் முன்பாகவோ விளையாட இடமில்லை. எந்த கலைகளும் கற்றுத்தரப்படுவதில்லை. கம்ப்யூட்டரும், மொபைல் போனும் தவிர, வேறு எதிலும் அவர்களுக்கு நாட்டமில்லை. இது நல்லதா... கவலையளிப்பதாக இல்லையா...
- அன்புடன், சாரதா.
அன்பு சாரதா,
நான், நீயெல்லாம் படித்தது, பொற்காலம் தான். நான் படித்தபோது, நுாலகத்திற்கென கூட ஒரு வகுப்பு ஒதுக்கப்பட்டது. மிக முக்கியமாக, வாரத்தில் இரண்டு நாட்கள், வகுப்பின் முதல் நேரத்தில் நன்னெறிகள் போதிக்கப்பட்டன. விளையாட்டு வகுப்பிற்காக காத்திருந்த காலம் அது. விளையாட்டு விழா, ஆண்டு விழாவின் போது, பள்ளியே திருவிழா கோலம் பூண்ட காலம்.
படிப்படியாக எல்லாம் குறைந்து, நீ சொல்கிற மாதிரி, மாணவ - மாணவியர் மடிக்கணினியையும், மொபைல் போனையும் மட்டுமே வைத்துக் கொண்டு மாரடிக்கின்றனர். விளையாட்டு மைதானங்கள் அற்ற பள்ளிகளாக, அவை வெறும் கான்கிரீட் கட்டடங்களாகி விட்டன.
நன்னெறி போதனைகளோ, கலை நயங்களோ பள்ளிகளின் தேவையல்ல. இப்போதைய கல்வி முறை, பணம் சம்பாதிக்கும் ரோபோக்களையே உருவாக்க முனைகின்றன. பெற்றோரும் அதையே விரும்புகின்றனர். பிள்ளைகளை விட பெற்றோர் இதில் தீவிரமாக இருக்கின்றனர்.
ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம் மட்டுமே மாணவர்களின் மனதிலும், அறிவிலும் புகுத்தப்படுகிறது. காரணம் ஐ.டி., நிறுவனங்கள் தரும் சம்பளமும், சலுகைகளும் தான். ஆனால், அதே ஐ.டி., தான் அறிவையும், நேரத்தையும் சக்கையாக பிழிந்து, சாறு எடுத்து விடுகிறது; பலவிதமான மனநோய்களுக்கும் ஆளாக்குகிறது.
அதற்காக ஐ.டி., வேண்டாமென்று, நான் சொல்லவில்லை. ஐ.டி.,யுடன் மற்றவையும் வேண்டும் தான். சம்பாத்தியத்தை விட உடல்நலம், மன நலம் முக்கியம் என்பதை பெற்றோரும், இப்போதைய மாணவ சமுதாயமும் உணர வேண்டும்.
என் தலைமுறை, அடுத்தததாக உன் தலைமுறை, இப்போது மூன்றாம் தலைமுறை, அதற்கடுத்த நான்காம் தலைமுறையை நினைத்து பார்க்கிறேன்; பயமாக இருக்கிறது. நல்வழி போதனைகளை கற்றுத்தர ஆளில்லை. பள்ளி மாணவர்களிடையிலும் வன்முறை தலைவிரித்தாடுகிறது. ஒரு மாணவன், மற்றொரு மாணவனை அடித்துக் கொல்கிறான்; மாணவியரை, ஆசிரியர்களே பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்.
இது குறித்து ஆட்சியாளர்களோ, அதிகாரிகளோ, பள்ளி - கல்லுாரி நிர்வாகங்களோ, பெற்றோரோ கவலைப்படுவது இல்லை.
'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...' என்ற பாடல் வரிகளை போல், மாணவர்களாக பார்த்து தங்களை நேர்வழிப்படுத்திக் கொண்டால் தான் உண்டு.
- அன்புடன், இந்துமதி.

