PUBLISHED ON : ஜன 31, 2026

மதுரை, எம்.சி.உயர்நிலைப் பள்ளியில், 1960ல், 8ம் வகுப்பு படித்தேன். வாரம் ஒருமுறை நடக்கும் நல்லொழுக்க வகுப்பின் ஆசிரியராக இருந்தார், மீனாட்சி சுந்தரம். கல்கி எழுதிய, 'பொன்னியின் செல்வன்' என்ற, அற்புத சரித்திரக் கதையை கூறுவதுடன், அதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் தத்ரூபமாக நடித்தும் காட்டுவார்.
இதன் மூலம் வீரம், வலிமை, அன்பு, பொறுமை, கருணை, திட்டமிடுதல், கலாச்சாரம் போன்ற அரிய விஷயங்கள், எனக்குள் பசுமரத்தாணி போல பதிந்தன. ஒரு மணி நேரம் தான் வகுப்பு என்றாலும், நிமிடத்தில் பறந்து விடும். கையில் எந்த குறிப்பும் இல்லாமல், கோர்வையாக சரித்திர நாவலில் உள்ளதை அப்படியே கூறி, மனதில் நிலை நிறுத்துவார். இதனால் தமிழில் ஆர்வம் கொண்டு, சரித்திர நுால்களை படித்து இன்புற்றேன்.
எனக்கு தற்போது, 79 வயது. இந்தியாவிலும், வெளிநாட்டிலும் கணிணி துறையில், பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை, மன நிறைவுடன் முடித்துள்ளேன். இதற்கெல்லாம், ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் எனக்குள் விதைத்த நல்லெழுக்கம், மன வலிமை, உதவும் மனப்பான்மை, திட்டமிடுதல் போன்றவை தான் மூல காரணம்.
அவர் தற்போது இல்லை என்றாலும், சரித்திரமாக மனதில் நிற்கும் அவரை, இதயபூர்வமாக வணங்கி நன்றி கூறுகிறேன். நல்ல ஒழுக்கமும், தீர்க்க சிந்தனையும், நல்லெண்ணமும் சிறு வயதிலேயே தோன்றினால், பெற்றோர், உற்றார், உறவினரும் போற்றுமாறு வாழ்ந்திடலாம். அதற்கு வித்திடுவதில், நல்ல ஆசிரியருக்கும், நல்ல புத்தகங்களுக்கும் முக்கிய இடம் உள்ளது என்பதில் ஐயமில்லை.
- எஸ்.ஆதிரத்தினம், சென்னை. தொடர்புக்கு: 94452 13963
