தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வினோத தீவு! (27)

வினோத தீவு! (27)

வினோத தீவு! (27)


PUBLISHED ON : ஜன 31, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 31, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு தீவில் குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து, அவர்களை மீட்க ஆசிரியை ஜான்வி உதவியுடன் திட்டமிட்டனர். சுரங்கம் அமைந்திருந்த பகுதிக்கு சென்று, பழங்குடியின குட்டி மனுஷங்களின் தலைவர்களிடம் பேசினர். சுரங்கக்காரர்களிடம் இருந்து அவர்களை விடுவிக்கும் திட்டங்களை, குட்டி மனுஷங்களில் ஒருவனான லியோவுடன் இணைந்து செயல்படுத்த துவங்கினர். இனி -

சுரங்கத் தொழிலாளர்களான குட்டி மனுஷங்கள் அனைவரும் தப்பி ஓடும் வகையில் சமிக்ஞை ஒலியை எழுப்பினான், லியோ. அவர்களும், அதே போன்ற சமிக்ஞை ஒலியை எழுப்பியபடி ஓடினர்.

சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த சுரங்கக்காரர்களில் ஒருவனான அன்பரசன், அவர்களை துரத்த முயன்றான். ஆனால், குட்டி மனுஷங்கள் ஆளுக்கு ஒரு புறமாக சிதறி ஓடியதோடு, சிலர் மரங்களிலும் தாவி ஏறினர்.

இதை சற்றும் எதிர்பாராத அன்பரசன், தன் கைத்துப்பாக்கியை எடுக்க, கன்டெய்னரை நோக்கி ஓடினான். அவன் அங்குமிங்கும் ஓடுவதை பார்த்து, லியோவுக்கு சிரிப்பு வந்தது.

கன்டெய்னருக்குள் வந்த அன்பரசன், அங்கு ஒயர்கள் எல்லாம் பிடுங்கி போடப்பட்டிருப்பதை பார்த்து, 'டென்ஷன்' ஆனான். அலமாரியில் மறைவாக வைக்கப் பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து வெளியில் வருவதற்குள், கூடாரம் காலியாகி இருந்தது .

''துப்பாக்கியை எடுத்து வருவதற்குள் அனைவரும் ஓடி விட்டனர், எரிக்சன்...''

வாக்கி டாக்கியில் தகவல் சொன்னான், அன்பரசன்.

''எப்படியாவது தீவுக்காரர்கள் சிலரை நாம் சிறைப் பிடித்தாக வேண்டும், அன்பு...'' வாக்கி டாக்கியில், எரிக்சனின் குரல் பதற்றமாக ஒலித்தது.

''சுரங்கத்தினுள் வேலை செய்வோரை அப்படியே, 'லாக்' செய்து, சுரங்கத்தின் வாயிலை மூடிவிட்டேன். அவர்களால் வெளியில் வர முடியாது. அவர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர்...''

அன்பரசன் கூறிய பதிலால், ஆறுதல் அடைந்தான், எரிக்சன்.

''சரி... அவர்கள் அங்கேயே கிடக்கட்டும். கடலோர காவல்படையினரின் கண்காணிப்பை மீறி, நாம் பாதுகாப்பாக சர்வதேச கடல் பகுதிக்குள் போக வேண்டும். அதற்கு, நமக்கு இந்தத் தீவின் பெண்களும், குழந்தைகளும் பணயக் கைதிகளாக தேவை. குடியிருப்பு பகுதியில் சிலரைப் பிடித்து வரலாம்...'' என்றான், எரிக்சன்.

எரிக்சன், ஆன்டனி ஆகிய இருவரும் குடியிருப்பு பகுதிக்கு வர, அன்பரசனும் வந்து அவர்களுடன் சேர்ந்தான். அங்கு, எவரும் தென்படவில்லை. குடிசைகளிலும் யாரும் இல்லை.

அவர்களுக்குப் பதற்றம் அதிகமானது. அச்சமயம் வாக்கி டாக்கி உயிர்த்தது.

''நண்பர்களே, எங்கே இருக்கிறீர்கள்...''

வாக்கி டாக்கியில் சுரங்கக்காரர்களின் கூட்டாளியான மதன்லாலின் குரல் கேட்டது. அவனுடன் மற்றொரு கூட்டாளி சுர்ஜித்தும், படகில் வந்து இறங்கியிருந்தனர்.

''கொஞ்சம் பிரச்னை ஆகிவிட்டது, மதன். நீயும், சுர்ஜித்தும் எங்கே இருக்கிறீர்கள்...'' என்றான், அன்பரசன்.

''இப்போது தான் படகை நங்கூரம் போட்டுவிட்டு, கரைக்கு வருகிறோம்...'' என்றான், மதன்லால்.

''இங்கு நிலவரம் சிக்கலாகி விட்டது. நாம் உடனடியாக இந்தத் தீவை விட்டு வெளியேறி, சர்வதேச கடல் பகுதிக்குள் செல்ல வேண்டும்...'' என்ற அன்பரசனின் குரலில் பதற்றம் இருந்தது.

''என்ன நடந்தது...'' என்றான், மதன்லால்.

''யாரோ நம் கூடாரத்தையும், கன்டெய்னரையும் சிதைத்து விட்டனர். கேமரா, லேப்டாப், மொபைல் போன் எல்லாவற்றையும் எடுத்து சென்று விட்டனர்...''

''விபரீதமாக அல்லவா இருக்கிறது. வெளி ஆட்கள் எவரேனும் வந்தனரா...'' என்றான், மதன்லால்.

''ஒரு குரங்கு பையனும், இரண்டு மாணவியரும் இங்கே சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களது வேலையாகத்தான் இருக்கும் என நினைக்கிறோம்...''

சந்தேகத்தை வெளிப்படுத்தினான், அன்பரசன்.

உஷாரடைந்த மதன்லால், ''சரி, இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்...'' என்றான்.

''பணயக் கைதிகளாக சிலரைப் பிடிக்கலாம் என்று தீவின் குடியிருப்புப் பகுதிக்குள் வந்தோம். ஆனால், இங்கே யாரும் இல்லை. அனைவரும் எங்கோ, ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றனர்...'' என்றான், அன்பரசன்.

''இவ்வளவு விஷயம் நடந்திருக்கும்போது, நம் பாதுகாப்புக்கு பணயக் கைதிகள் கண்டிப்பாக தேவை...'' என்றான், மதன்லால்.

''சுரங்கத்தில் சிலரை அடைத்து வைத்திருக்கிறோம்...'' என்றான், அன்பரசன்.

''அப்புறமென்ன... நேரத்தை வீணாக்காமல் சுரங்கத்துக்கு வந்து விடுங்கள். நாங்களும் வந்து விடுகிறோம். குரங்கு மனிதர்களில் பத்து பேரை துாக்கி போய்விடலாம். சர்வதேச கடல் பகுதிக்குள் சென்றதும், அவர்களைக் கடலில் துாக்கிப் போட்டு விட்டு, நாம் பாகிஸ்தானுக்கோ, இலங்கைக்கோ சென்று விடலாம்...''

திட்டத்தை விவரித்தான், மதன்லால்.

அவர்கள் அனைவரும் சுரங்கத்திற்கு வந்தனர். மூடி இருந்த கல்லை நகர்த்தி, சுரங்கத்தைத் திறந்தான், ஆன்டனி.

''டேய், வெளியே வாங்கடா...'' என்று உரக்க கூறினான், அன்பரசன்.

உள்ளிருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை.

''உள்ளே என்ன பண்றாங்க... நாம் சும்மா மிரட்டுகிறோம் என்று நினைக்கிறானுங்களா...'' என்ற எரிக்சன், தன் கைத் துப்பாக்கியை எடுத்து, சைலன்சரை மாட்டி, சுரங்கத்தின் உள்ளே சுட முயற்சித்தான்.

''அவசரப்படாதே. உள்ளே வெடி மருந்து வைத்திருப்பர். சுரங்கமே வெடித்துச் சிதறி விடும். என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது...

''ஊரில் வளையிலிருந்து எலியை வெளியே வர வைத்துப் பிடிக்கிற பழைய முறை தான். இங்கிருந்து புகையை சுரங்கத்தின் உள்ளே அனுப்பினால், அங்கிருப்போர் மூச்சுத்திணறி இருமியபடி வெளியே வந்து விடுவர்...'' என, திட்டத்தை விவரித்தான் சுர்ஜித்.

காட்டினுள் குளவிக் கூடுகள், தேன்கூடுகள் போன்றவற்றை கலைக்க புகையை பயன்படுத்வது போல, நெருப்பு மூட்டி புகையை குகைக்குள் செலுத்தினர்.

உள்ளிருந்து எந்த ஒரு எதிர்வினையும் வரவில்லை. மாறாக, சற்று தொலைவில் பூமிக்கு அடியில் இருந்து புகை வெளி வருவது தெரிந்தது.



- தொடரும்...

நரேஷ் அருண்குமார்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us