
சுக்குரு தாத்தாவின் கடை வாசலில் சிறுவர்கள் கூட்டம்.
இன்று கிளிகள் வந்துள்ளன போலும்...
மளிகை கடை தான் வைத்துள்ளார் தாத்தா.
வாரம் ஒருமுறை அந்த கடைக்கு கிளிகள் கொண்டுவரப்படும்.
அவை, கூண்டுக்குள் அடைக்கப் பட்டிருக்கும். அவற்றைக் காண கூடுவர் சிறுவர்கள்.
பச்சைப்பட்டு போன்ற உடலும், மிளகாய் பழச் சிவப்பில் அலகும் பார்க்கப் பரவசம் தரும்.
தாத்தாவுக்கு எங்கிருந்து தான் கிளிகள் கிடைக்கின்றனவோ...
கவிதாவின் வகுப்பு தோழன் மோகன். ஒருமுறை கிளி பிடித்து வருவதாக சவால் விட்டு சென்றான். மறுநாள் கையில் காயம்பட்டு கட்டுடன் வந்தது தான் மிச்சம்.
கவிதா படித்த பள்ளி வளாகத்தில் ஒரு இலுப்பை மரம் இருந்தது. அதில் உள்ள பொந்தில் பச்சைக்கிளிகள் நுழைவதையும், வெளியில் வருவதையும் பார்த்திருக்கிறாள்.
அந்த பொந்தில் தான் கைவிட்டிருந்தான் மோகன். கையில் கொத்தி விட்டது கிளி.
காயம் ஆறுவதற்கு ஒரு மாதம் ஆனது. அத்துடன் கிளி பிடிக்கும் ஆசையை விட்டு விட்டான் மோகன்.
கூண்டுக்குள் இருக்கும் கிளிகளை கண்டதும், ''ரொம்ப பாவமா இருக்குடி...'' என, தோழி உமாவிடம் வருந்தினாள் கவிதா.
''ஏன்... அவற்றுக்கு என்ன குறைச்சல்... உண்ண தானியமும், பழங்களும், தண்ணீரும் வைக்கிறாரே தாத்தா...''
''உணவும், தண்ணீரும் கொடுத்தால் போதுமா... கூண்டுக்குள் அடைந்து கிடப்பது சித்திரவதை இல்லையா...''
''அதற்கு நாம் என்ன செய்ய முடியும்...''
விடை கிடைக்காத கேள்வியுடன் உரையாடல் முடிந்தது.
ஒரு முடிவுடன் வீட்டுக்குச் சென்றாள் கவிதா. உண்டியலை திறந்து பார்த்தாள். கணிசமான தொகை சேர்ந்திருந்தது.
உண்டியலை எடுத்தபடி தாத்தா கடையை நோக்கி ஓடினாள். சில்லறை காசுகளை தாத்தா முன் கொட்டினாள்.
''கூண்டுடன் எடுத்து செல்லம்மா...''
மகிழ்வுடன் கூறினார் தாத்தா. எல்லா கிளிகளும் ஒரே சமயத்தில் விற்று தீர்ந்ததில் அவருக்கு திருப்தி.
கூண்டுக்கிளிகளுடன் வீட்டிற்கு ஓடினாள் கவிதா.
ஆர்வத்துடன் பின்னால் ஓடி வந்தனர் சிறுவர்கள்.
வீட்டு வாசலில் வந்ததும் கூண்டை திறந்து விட்டாள் கவிதா.
படபடவென சிறகடித்து பறந்தன கிளிகள்.
'ஏன் அக்கா கிளிகளை திறந்து விட்டீங்க...'
ஏமாற்றத்துடன் கேட்டனர் சிறுவர்கள்.
''உங்களை எல்லாம் ஒரு அறையில் அடைத்து வைத்தால் எப்படி இருக்கும்...''
'ஐயோ... சிறிது நேரம் கூட அங்கு இருக்க முடியாதக்கா...'
''அப்படி தானே இருக்கும் அந்த கிளிகளுக்கும்...''
'நல்ல காரியம் செய்தீங்க அக்கா...'
மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர் சிறுவர்கள்.
குழந்தைகளே... வன உயிரினங்களை வீட்டில் அடைத்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். அதை புரிந்து இயற்கையில் இருப்பதை ரசிக்க பழகுங்கள்.
பொன்.கண்ணகி