
ஆசிரியர் நீலகண்டன் நடத்தும் அறிவியல் வகுப்பிற்காக, ஆவலுடன் காத்திருந்தனர் மாணவர்கள். பாட வேளை மணி ஒலித்தது.
நேரம் தவறாமையை கடைபிடிக்கும் ஆசிரியரின் ஒழுங்கு மாணவர்கள் மத்தியில் பிரபலம். வகுப்பில், கண்டிப்பும், அன்பும் சம விகிதத்தில் இருக்கும்.
அன்று வகுப்புக்கு உரிய நேரத்தில் வரவில்லை.
கருப்பு நிற பையும், மிக அழகான காகிதப் பையையும் எடுத்து வந்து, மேஜையில் வைத்த உதவியாளர் செல்வத்திடம், 'ஆசிரியர் ஏன் வகுப்புக்கு வரவில்லை; முக்கிய வேலையில் ஈடுப்பட்டுள்ளாரா...' என மாணவர்களிடமிருந்து குரல் எழுந்தது.
'தலைமையாசிரியர் அறையில் பேசிக்கொண்டிருக்கிறார். அமைதியாக, நேற்றைய பாடத்தை படிக்கும்படி கூறினார். மேஜை மீதிருக்கும் பைகளை யாரும் தொடாதீர்...' என கூறி சென்றார்.
மாணவர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
''ஏதோ கெட்ட வாடை வருது...'' என்றான் மாணவன் சதீஷ்.
''அப்படியா...''
மூக்கை உறிஞ்சியவனுக்கு, அடர்த்தி மிகுந்த துர்வாடை வீசியது.
மின்விசிறி வேகத்தை அதிகப்படுத்தினர் மாணவர்கள்.
துர்வாடை, வகுப்பு முழுதும் பரவியது.
பொறுக்க முடியாமல் தவித்தனர். நடுவே நறுமணமும் வீசியது.
மாணவர்களுக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
துர்நாற்றத்திற்கான காரணத்தை அலசி ஆராய்ந்தனர்.
''மேஜை மேல் இருக்கும், இந்த கருப்பு பையிலிருந்து தான் துர் வாடையே வருது...'' என்றான் முருகேசன்.
''பையில் இருப்பதை பார்க்கலாம்...''
நரேசை கூப்பிட்டான் முருகேசன்.
''நான் வர மாட்டேன். ஆசிரியர் திட்டுவார்...'' என விலகினான்.
''நீ தொட நடுங்கியாச்சே... ஆசிரியரை பார்த்ததும் தலை குனியும் ஆள்...''
கேலி செய்தான் முருகேசன்.
''ஆசிரியர் மீது நான் வைத்திருப்பது மரியாதை. உன் அகராதியில் அதற்கு பயம் என, புரிந்து கொண்டால் என்ன செய்வது...''
கோபத்துடன் விளக்கினான் நரேஷ்.
''ஓ... அப்படியே இருக்கட்டும்...''
நக்கலடித்து, சிரித்தான் முருகேசன்.
''வகுப்புக்கு வெளியே வாசலில், அமைதியாக நிற்போம். இதுக்கு மேல் இங்கு மூச்சு விட முடியாமல், மயங்கி விடுவோம்...''
அவஸ்த்தையை உணர்ந்து கூறினான் பிரகாஷ்.
வகுப்புக்கு வெளியில் வந்தனர் மாணவர்கள். அப்போது வந்த ஆசிரியர் நீலகண்டன், ''வகுப்புக்கு வெளியில் எதுக்கு நிற்கிறீர்...'' என கோபத்துடன் கேட்டார்.
'துர்வாடையால் மூச்சு திணறி வெளியில் வந்தோம்...'
''அப்படியா... இதை முதலில் அப்புறப்படுத்துங்க...''
உதவியாளரிடம் கூறினார் ஆசிரியர்.
அதை எடுத்துச் சென்ற பின்னும், லேசான துர்வாடை இருந்தது.
வகுப்புக்குள் வரத் தயங்கி நின்றனர் மாணவர்கள்.
ஜிப்பா பாக்கெட்டிலிருந்து, ஈரமான சிறிய பஞ்சு உருண்டையை எடுத்து மேஜையில் வைத்தார் ஆசிரியர்.
நறுமணம், நொடியில் பரவி புத்துணர்ச்சி தந்தது.
உடனே, வகுப்புக்குள் நுழைந்தனர் மாணவர்கள்.
''தற்போது நிகழ்ந்த செய்முறை பற்றி, பாடக் குறிப்பு சொல்கிறேன். இதை மனதில் பதித்தால் நன்மை அளிக்கும்...''
மாணவர்கள் புரியாமல் விழித்தனர்.
''ஒரு பையில் கெட்டுப் போன இறைச்சியும், மற்றொன்றில், மணம் மிகுந்த பூவையும் வைத்திருந்தேன்...
''கெட்டது தெரியாமல் இருக்க, காகித பையில் மணம் மிகுந்த மலர் இருந்தது; பூவின் நறுமணம் வரவில்லையா...''
மாணவன் சதீஷ், ''முதலில், பூ வாசனை வந்தது. அப்புறம் இறைச்சி கெட்ட வாசனை அதிகரித்ததால் நறுமணம் தெரியவில்லை...'' என்றான்.
''பைக்குள் இருந்த கெட்ட இறைச்சியின் துர்நாற்றம் எப்படி, வகுப்பில் பரவியது...''
''மேஜை மீது இருந்தாலும், அதோட கெட்டு போன தன்மையால், இந்த அறை முழுதும் துர்நாற்றம் பரவியது; அதில், மூச்சு திணறியபடி தான் வெளியே வந்தோம்...'' என்றான் பிரகாஷ்.
''இதை இப்படி எடுத்துக் கொள்வோம். பள்ளியில், தீய பழக்க வழக்கங்கள் உடைய மாணவர்கள் சிலர் இருப்பர்; அந்த பழக்கங்கள், கெட்ட சேர்க்கை, பொறாமை, வன்முறை, வன்மம் என்ற துர்வாசனை... வாழ்க்கையில், சிறிது இருந்தாலும் எங்கும் பரவி மூச்சு திணற வைக்கும். இனிய வாழ்க்கை அமையாது...
''நல்லொழுக்கத்துடன் வாழ்க்கை அமைத்தால், மல்லிகைத் தோட்டமாய் மணம் வீசும். எண்ணம், செயல்கள் கூட இனிய விளைவுகளை ஏற்படுத்தும். அதற்கு தான், இந்த செயல் முறை விளக்கம்... நல்ல மலராய் மணம் வீச வாழ்த்துகள்...'' என்றார் ஆசிரியர்.
யோசிக்க துவங்கினர் மாணவர்கள்.
அவருடைய அறிவுரை மாணவர்கள் மனதில் பதிந்தது.
செயல்முறை விளக்கம் சிந்திக்க வைத்தது.
பட்டூஸ்... சிறு வயதில் நல்ல விஷயங்களை கற்றால் வாழ்க்கை சிறப்புடன் அமையும்!
ஆர்.கஸ்துாரி