தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சோளக்காட்டு பொம்மை!

சோளக்காட்டு பொம்மை!

சோளக்காட்டு பொம்மை!


PUBLISHED ON : ஜூன் 13, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோடைக்காலம் துவங்கியதால் கடும் வெயில் சுட்டெரித்தது. குளங்கள் எல்லாம், தண்ணீரின்றி வறண்டு போயின. இலைகளை உதிர்த்து, மரங்கள் மொட்டையாக நின்றன. பறவைகள் இரைக்காகவும், தண்ணீருக்காகவும் மிகவும் கஷ்டப்பட்டன.

புதுக்குடி கிராமத்தில் வசித்து வந்தார், அறிவுமணி. அவருக்கு சொந்தமாக தோட்டம் இருந்தது. அங்கு உள்ள கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருந்தது. அதனால், விவசாயம் சிறப்பாக நடைபெற்றது. சோளக்கதிர்கள் விளைந்து, முற்றும் தருவாயில் இருந்தன.

பசியோடு இருந்த கிளிக் கூட்டம், அந்த தோட்டத்துக்கு வந்தது. முற்றிய சோளக்கதிர்களை கண்டன கிளிகள். அவற்றை கொத்தித் தின்ன ஆசைப்பட்டன.

விளைந்த சோள பயிருக்குள் பேன்ட், சட்டை அணிந்த உருவம் ஒன்று நிற்பதை கண்டன கிளிகள்.

அது, சோளக்காட்டு பொம்மை என்பது தெரியாமல் பயந்து நடுங்கின. தானியங்களை உண்ணாமல் வேறு இடம் செல்ல முடிவெடுத்தன.

கூட்டத்தில் இருந்த புத்திசாலி கிளி சற்று துணிச்சலாக யோசித்தது. நீண்ட நேரம் அந்த உருவ பொம்மையை கவனித்தது. பின், 'பயப்பட வேண்டாம்... அது உயிருடன் உள்ள மனிதன் அல்ல. நம்மை ஒன்றும் செய்ய முடியாது...' என்றது.

'எதை வைத்து இந்த முடிவை சொல்கிறாய்...'

மற்ற கிளிகள் கேட்டன.

'இது கோடைக் காலம்... மனிதராக இருந்தால், இவ்வளவு நேரம் வெயிலில் நிற்க முடியாது. குடையாவது பிடித்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல... நாம் கூட்டமாக வந்துள்ளோம். இதை கண்டதும் சத்தமிட்டு துரத்த முயற்சித்து இருப்பார்...'

புத்திசாலி கிளியின் பதிலை கேட்ட பிறகும், தயங்கி நின்றது கிளிக்கூட்டம்.

புத்திசாலி கிளி, துணிச்சலாக பறந்து சென்று, சோளக்காட்டு பொம்மை உருவத்தின் மீது அமர்ந்தது.

இதை கண்ட மற்ற கிளிகள் சுறுசுறுப்பாயின. நம்பிக்கையுடன் சோளக்கதிர்களை கொத்தி தின்றன. அருகில் இருந்த தொட்டியில், தண்ணீர் பருகி தாகம் தணித்தன.

கிளிகள் பசியாறி, தாகம் தணித்த போது, தோட்டத்தின் சொந்தக்காரர் அறிவுமணி குடை பிடித்தபடி வந்தார். எச்சரிக்கையடைந்த கிளிகள், கூட்டமாக சிறகை விரித்து பறந்து சென்றன.

பட்டூஸ்... பொய் தோற்றத்தை கண்டு அச்சப்படாமல், பகுத்தறிந்து செயல்பட வேண்டும்.

டேனியல் ஜூலியட்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us