PUBLISHED ON : ஜூன் 13, 2026

அன்புள்ள இந்துமதி,
என் சொந்த மாமா பையனையே திருமணம் செய்து கொண்டேன். திருமணமான இரண்டாம் ஆண்டில், எனக்கு மகன் பிறந்தான். ஏழாம் மாத இறுதியிலே, பிரசவமாகி விட்டது. குழந்தையை என் கண்ணில் காட்டவில்லை; முதலில் சில நாட்கள், 'இன்குபேட்டரில்' வைத்துப் பராமரித்த பின்னரே, என்னிடம் ஒப்படைத்தனர்.
குழந்தையின் எடை குறைவாக இருந்தது. இரண்டு வயதில் கூட அவன் பேசவில்லை. கால்கள் இரண்டும் வளைந்திருந்தன; நடக்கவில்லை. அவன் உடல் நிலையை ஆராய்ந்த குழந்தை நல மருத்துவர், 'மூளை வளர்ச்சி குறைவாக இருக்கிறது... எனவே, ' என்ஸ பபால்' என்ற மாத்திரை கொடுக்க வேண்டும்...' என்று கூறினார். அது மட்டுமின்றி, 'வெளிநாட்டிலிருந்து ஒரு ஊசி மருந்தை வரவழைத்து செலுத்தலாம்; இதை செய்தாலும் தேறுவது கடினம்...' என்றார்.
இத்தனையும் செய்த பின், இப்போது மிகச்சிறந்த கல்லுாரி ஒன்றில், எம்.பி.ஏ., படிக்கிறான்; அதி புத்திசாலி மாணவன் என்று, பள்ளியில் படித்த போதே பாராட்டு பெற்றிருக்கிறான். பி.காம்., படித்த போது கல்லுாரியில் பிரபலம் ஆனான். பேச்சு போட்டிகளிலும் முதல் பரிசு பெற்றுள்ளான் .
இத்தனை இருந்தும், தினசரி செயல்பாடுகளில் அவனிடம் பெரும் குறை இருக்கிறது. பல் தேய்ப்பது, குளிப்பது, சாப்பிடுவது என, எல்லாமே மிகவும் மெதுவாகச் செய்வான். பேசுவதிலும், ஒரே விஷயத்தை பலமுறை சொல்வான். கேட்பவர் எரிச்சல்படுவர்.
ஏன்... நானே பலமுறை கோபப்பட்டிருக்கிறேன். குளிக்க சோம்பேறித்தனம் காட்டுவான்; சீராக உடையை அணிய மாட்டான். ஒரு பந்தியில் சாப்பிட உட்கார்ந்தால், முதலில் அமர்ந்து, கடைசியாக எழுந்திருப்பான். இவனது நடவடிக்கை எனக்கு சங்கடமாகவும், அவமானமாகவும் இருக்கிறது. என்ன செய்ய...
- இப்படிக்கு,
வித்யாவதி.
அன்புள்ள வித்யா,
உன் கடிதத்தைப் படித்ததும் எனக்கு, சங்கடமும், அவமானமும் ஏற்பட்டது. ஒரு பெற்ற தாய் இப்படி நினைக்கலாமா... அதுவும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை, பல விதமான குறைபாடுகளை கடந்து, கைதேர்ந்த மருத்துவரின் மருந்து, மாத்திரைகளால், இன்று அனைத்து தடைகளையும் கடந்து வந்திருக்கிறான்.
மூளை வளர்ச்சி குறைவு என, மருத்துவரால் கூறப்பட்ட குழந்தை, இன்று பள்ளி, கல்லுாரிகளில் முதல் மாணவனாகத் தேறி, அனைவராலும் பாராட்டப்படுகிற நிலையில் இருக்கிறான். இதை எல்லாம் மறந்து, அவனது குறைகளை மட்டும் பெரிதாக கண்டு சங்கடமாகவும், அவமானமாகவும் இருக்கிறது என்கிறாயே... இது நியாயமா தாயே...
அவனை இந்த அளவுக்கு கொண்டு வர நீயும், உன் கணவரும் எவ்வளவு பாடுபட்டிருப்பீர்கள்.
உங்கள் முயற்சி தானே அவனை இந்த அளவுக்கு ஆக்கியிருக்கிறது. அவற்றை எல்லாம் மறந்து இப்படி பேசலாமா...
அவன் ஒரு மாற்றுத்திறனாளி... நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். நீங்களே புரிந்து கொள்ளாமல் கோபப்பட்டால், வேறு யார் புரிந்து கொள்வர். இதுவே வெளிநாடாக இருந்தால்... அங்கு சாதாரண குழந்தைகளிடம் கோபப்பட்டாலே, சட்டம் பாயும். மாற்றுத்திறனாளி எனப்படும் குறைபாடுள்ளவர்களிடம் கோபப்பட்டால் என்னவாகும்... நினைத்து பாருங்கள்.
குழந்தைகளிடம் மட்டுமல்ல, எல்லாரிடமும் பொறுமையாக, நிதானமாக பழக கற்றுக்கொள்ளவும். குறைபாடுள்ள குழந்தைகளோ... இளைய தலைமுறையோ... முதியவர்களோ... யாராக இருந்தாலும் அன்பைக் காட்டு; கரிசனமாக நடந்து கொள். மென்மையான சொற்களும், ஆறுதல் வார்த்தைகளுமே அவர்களுக்கு தேவை. இவற்றை மனதில் கொண்டு நடந்தால் போதும்... அவர்கள் மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும்.
- அன்புடன், இந்துமதி.
