
சிறு வயது முதலே, சொர்க்கம், நரகத்தை அறிந்து கொள்ள, படாத பாடு பட்டான் பாவரசு.
அவனுக்கு சரியான பதிலை யாரும் சொல்லவில்லை.
ஊருக்கு புதிதாக வந்திருந்த சாமியாரிடம் கேட்டால், கண்டிப்பாக பதில் கிடைக்கும் என்று அறிந்தான்.
சாமியாரை, 'கத்தி முனையில் மிரட்டியாவது, சொர்க்கம், நரகம் பற்றி தெரிந்து கொண்டு தான், மறுவேலை' என்ற முடிவோடு சென்றான் பாவரசு.
அவன் சென்ற நேரம் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் சாமியார்.
வெளியே நின்றபடி, 'எனக்கு சொர்க்கம், நரகம் பற்றி உடனே தெரிய வேண்டும்...' என்று சத்தமிட்டான் பாவரசு.
பதில் ஏதும் உள்ளிருந்து வரவில்லை.
சற்று தாமதித்து, 'காது கேட்கவில்லையா... சொர்க்கம், நரகம் பற்றி உடனே சொல்லுங்கள்...' என்று மீண்டும் சத்தமிட்டான்.
தியானத்தில் இருந்த சாமியார் கண் விழித்தார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில், 'யாரடா நீ முட்டாளே... கலைந்த தலையுடன், அசிங்க முகத்துடன் என் முன் நின்று தொந்தரவு செய்கிறாயே...' என்றார்.
சாமியாரின் வார்த்தைகள், பாவரசு மனதில் ஈட்டி போல் இறங்கியது. கடும் கோபத்தை உண்டாக்கியது.
தன்னிலை மறந்தவனாக, 'என்ன செய்கிறேன் பார்...' என்று குதித்தபடி சாமியாரை வெட்ட வாளை உருவினான்.
அமைதி காத்தபடி, 'பார்த்தாயா... உன் இந்த நிலை தான் நரகம்...' என்று சுட்டிக்காட்டினார் சாமியார்.
தவறை உணர்ந்தான் பாவரசு.
கோபம் தணிந்து, இயல்பு நிலைக்கு திரும்பினான்.
மிகப்பெரிய பாவம் செய்ய இருந்தவன், அதிலிருந்து தப்பியதை எண்ணி சந்தோஷமடைந்தான்.
அவன் முகத்தில் அமைதியை சுட்டிக்காட்டி, 'உன் இந்த நிலை தான் சொர்க்கம்...' என்றார் சாமியார்.
நீண்ட நாட்களாக தேடிய கேள்விக்கு விடை கிடைத்தது. திருப்தியுடன் வீடு திரும்பினான் பாவரசு.
குட்டீஸ்... சொர்க்கம், நரகம் என்பது நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் தான் இருக்கிறது.
ச. ஜானகி சங்கர்