
''அம்மா... எனக்கு வகுப்பில் ஒரு பிரச்னை...''
பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் தீபக், சற்று சீரியசாக வந்தான்.
''என்னப்பா...''
பரிவுடன் கேட்டார் அம்மா.
''விளையாட்டுல தீவிர ஆர்வம் காட்டுறதால விளையாட்டு ஆசிரியர் அடிக்கடி பயிற்சிக்கு கூப்பிடுறார். அதனால், படிப்புல கவனம் செலுத்த முடியாம இருக்கு... இதை வகுப்பு ஆசிரியை சுட்டிக்காட்டுறாங்க... என்ன செய்றது...''
''எந்த பிரச்னைக்கும் தீர்வு உண்டு. நிதானமா யோசிச்சுப் பாரு...''
''யோசிச்சேன்... என்ன செய்றதுன்னு தான் புரியல்ல...''
''சரி... அதை விடு... இப்போ தோட்டத்துக்கு போய், முருங்கைக்காய் பறிச்சு வா... சாம்பார் வைக்கணும்...''
தோட்டத்து போனான் தீபக். காய்கள் எங்குள்ளன என, அண்ணாந்து பார்த்தான்.
சிறிது உயரத்தில் எட்டாத துாரத்தில் இருந்தன.
அவனால் பறிக்க இயலவில்லை.
மனதில் ஒரு யோசனை வந்தது.
பக்கத்தில் நின்ற சிறிய மரத்தில் ஏறினான்.
சரியான கோணத்தை ஊகித்து, முருங்கை மரத்தில் காய்களைத் தட்டி விட்டான். தரையில் விழுந்தன. குஷியானான் தீபக்.
உற்சாகமாக வந்து, ''இந்தாங்கம்மா...'' என காய்களைக் கொடுத்தான்.
அவற்றை கைப்பற்றிய விதத்தை சுவாரசியம் குறையாமல் விளக்கினான்.
''பார்வை கோணத்தை மாற்றியவுடன், காய்களை பறிக்க முடிந்தது அல்லவா... அதேபோல் தான் பிரச்னைகளையும் தீர்க்க முடியும். அதிகாலை சற்று சீக்கிரமாக எழுந்தால் கூடுதலாக நேரம் கிடைக்கும். அதை நிர்வாகம் செய்தால், படிப்பிலும் வெல்லலாம்... விளையாட்டிலும் ஜொலிக்கலாம்...''
அன்புடன் கூறி மகனை அணைத்து கொண்டார் அம்மா. மனதில் நம்பிக்கை பெருக்குடன் அடுத்த பயணத்துக்கு தயாரானான் தீபக்.
குழந்தைகளே... மனதை அமைதியாக்கி சிந்தித்தால் எந்த பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.
- எஸ்.கவுரி மீனாட்சி!