
அன்புள்ள ஆன்டி...
என் வயது, 13; அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவி. வகுப்பறைக்குள் எப்போது நான் நுழைந்தாலும், 'இதோ நாத்தக்குட்டி வந்துட்டா... எல்லாரும் மூக்கை மூடிக் கொள்ளுங்கள்...' என கிண்டல் செய்வர். இதை தவிர்க்க முடியாமல் தவிக்கிறேன். குடும்பத்தில், உறவில், நட்பில் இருப்போரும் இதேபோல் கேலி கிண்டல் செய்கின்றனர். எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுகிறேன்.
என்ன செய்தால் என் உடலில் உள்ள துர்நாற்ற பிரச்னையிலிருந்து வெளியே வரலாம்... எனக்கு நல்ல பதில் தந்து உதவுங்கள்.
அன்பு மகளுக்கு...
மனித உடலில், நான்கு வகையான வியர்வை சுரப்பிகள் உள்ளன. முதலில், 'எக்ரின்' என்ற வகை சுரப்பி. இவ்வகை உடலில், 40 லட்சம் வரை எண்ணிக்கையில் இருக்கின்றன. குழந்தைகளுக்கு இவ்வகை வியர்வை சுரப்பி கூடுதலாக செயல்படும்.
இரண்டாவதாக, 'அபோகிரின்' என்ற சுரப்பி. இது, மார்பு, முகம், தலை, அக்குள், கால் கவட்டை பகுதிகளில் காணப்படுகிறது. பருவ வயதில், இந்த சுரப்பிகள் வளர்ந்து செயல்பட துவங்கும்.
இவை தவிர, அபோ எக்ரின், செபாசியஸ் என்ற சுரப்பிகளும் உடலில் உள்ளன!
மனித வியர்வையில், 99 சதவீதம் நீரும், 1 சதவீதம் உப்பு மற்றும் கொழுப்பும் காணப்படுகிறது. ஒரு வகை புரதமும் உள்ளது. அது, கிருமி, பூஞ்சைகளை அழிக்க வல்லது. வியர்வையில் உள்ள, 'டெர்ம்சிடின்' என்ற புரதம் கிருமி, பூஞ்சைகளை அழிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த புரதம் மிகக் குறைந்த அளவே கலந்திருக்கும். இது தவிர, வியர்வையில், சோடியம், பொட்டாஷியம், கால்ஷியம், மெக்னீஷியம், பெரமோன்ஸ் மற்றும் வீரியமுள்ள யூரியா, யூரிக் அமிலம், அமோனியா, லாக்டிக் அமிலம் மற்றும் வைட்டமின் - சி போன்றவையும் சேர்ந்திருக்கும்.
ஒரு மனிதனுக்கு சராசரியாக, நாள் ஒன்றுக்கு, 700 மில்லி வியர்வை வெளியேறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதீத வெப்பம் மற்றும் கடின உடற்பயிற்சி, உழைப்பு போன்றவற்றால் வியர்வை அதிகம் வெளியேறும்.
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா...
மரபணுவில், 'ஏபிசிசி - 11' என்ற ஒரு வகை உண்டு. இது, கிழக்காசிய நாடுகளான, கொரியா, ஜப்பானில் வசிக்கும், 95 சதவீதம் பேருக்கு இல்லை. இதனால், இங்குள்ளோருக்கு அக்குளில் வியர்க்கவே வியர்க்காது. அதனால், அவர்கள் வாசனை திரவியங்களை உபயோகிப்பது இல்லை.
உன் வியர்வை துர்நாற்ற பிரச்னைக்கு வருவோம்...
உணவில், பூண்டு, வெங்காயம், முட்டைக்கோஸ், பெருங்காயம், பச்சை பூக்கோஸ், சிவப்பு மாமிசம் அதிகம் சேர்த்தால் வியர்வையில் துர்நாற்றம் வீசும்.
மரபியல் ரீதியாகவும், வியர்வையில் துர்நாற்றம் ஏற்படலாம். குண்டு பாப்பாவாக இருந்தாலும், தைராய்டு பிரச்னை இருந்தாலும், வியர்வையில் துர்நாற்றம் வீசும். காலையும், மாலையும் குளிப்பது உட்பட, எளிய நடைமுறைகளால் இந்த பிரச்னையை தீர்த்து விடலாம். இதற்காக மனம் கலங்க வேண்டாம். நம்பிக்கையுடன் முன்னேறு செல்லம்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.