
சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தது சிங்கராஜா.
அதன் முன், பவ்வியமாக அமர்ந்திருந்தன விலங்குகள். குரங்கை யாரும் அழைக்கவில்லை.
'ஆறறிவு பெற்ற மனிதர்களுக்கு முன், நாம் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. இந்த ஆண்டிலிருந்து நாமும், தீபாவளி கொண்டாடலாம். அது பற்றி அறிந்து வந்துள்ள காட்டுப்பூனையிடம் விபரம் அறிவோம்...' என்றது சிங்கராஜா.
சுருக்கமாக புரியும் வகையில், 'மக்கள், அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி புத்தாடை உடுத்தி விளக்கேற்றுகின்றனர்; நல்உணவுகளை தயாரித்து ருசிக்கின்றனர். வாழ்த்துகளை பரிமாறி மகிழ்கின்றனர்...
'குறும்புக்கார சிறுவர்கள் பட்டாசை கையில் வைத்தே வெடித்து ஆபத்தை தேடிக்கொள்கின்றனர். அங்கு, மகிழ்ச்சி போய் வேதனை குடி கொள்கிறது. அணுகுண்டு என்ற வெடி காது ஜவ்வுகள் கிழிய சத்தம் எழுப்புகிறது. பறவைகள் பயந்து நடுங்குகின்றன...' என்றது காட்டுப்பூனை.
'நாம் வித்தியாசமாக கொண்டாடலாம்...'
கரடி தலைமையில் குழுவை அமைத்தது சிங்கராஜா.
'நண்பர்களே... கொண்டாட்டத்துக்கு என்னென்ன வேண்டும்...'
வினவியது கரடி.
'எனக்கு பட்டுச் சேலையும், ரவிக்கையும் வேண்டும்...' என்றது புலி.
அடுத்து, இனிப்பு பற்றி பேச்சு வந்தது.
'நரியின் நாக்கில், குடம் குடமாக கொட்டுகிறதே ஜொள். இனிப்பு பண்டங்களை நினைத்தாலே தித்திக்கிறதா...'
தமாஷாக கேட்டது ஒட்டகச்சிவிங்கி.
மகிழ்ச்சியில் தலையாட்டியது நரி.
பட்டாசு பக்கம் பேச்சு திரும்பியது.
'சிவகாசி சென்று, ஒரு லோடு வெடி, மத்தாப்பு வாங்கி வருகிறேன்...'
புலியின் கூற்று கேட்டு, 'ஆஹா... பட்டாசுகளை தும்பிக்கையில் பிடித்து வெடிப்பேன்...' என துள்ளிக் குதித்தது யானை.
குறுக்கிட்ட வரையாடு, 'அண்ணா... காட்டுப்பூனை ஓதியதை அதற்குள் மறந்துட்டீங்களா...' என கேட்டது.
'மாசு ஏற்படுத்தாத பசுமை வெடிகள் தான் நாம் பயன்படுத்த வேண்டும்...'
கட்டளையிட்ட சிங்கராஜா தயங்கி நின்ற முயலை பார்த்து, 'எதையோ சொல்ல முன் வருகிறாய். தயக்கம் இன்றி சொல்...' என்றது.
'சிங்கராஜா... உண்மையாகவே தீபாவளி என்றால் என்ன...'
'நரகாசுரனை, கிருஷ்ணர் வதம் செய்து அழித்த நாள் தான் தீபாவளி. தீமை அழிந்து நன்மை வென்ற நாள்... நாமும் மகிழ்ந்து, பிறரையும் மகிழச் செய்வது தான் தீபாவளி. ஆடை, இனிப்பு பலகாரங்களால் மகிழ்வது அல்ல...' என்றது பசு.
'ஏன் இப்படி கூறுகிறாய்...' என்றது சிங்கராஜா.
'குரங்கை ஒதுக்கி வைத்து, நாம் மட்டும் தீபாவளி கொண்டாடுவது முறையா... அது தன்னந்தனியே வெறுமையுடன் சோகமாக அமர்ந்திருக்கிறது. அது எவ்விதத்தில் நியாயம்...'
'என் அறிவு கண்ணை திறந்தாய். தவறுக்கு, மன்னிப்பு கேட்கிறேன். குரங்கையும் அழைக்க ஏற்பாடு செய்கிறேன்...' என்றது சிங்கராஜா.
மகிழ்ச்சி பொங்க மரத்தில் இருந்து, 'பொத்'தென குதித்தது குரங்கு.
தித்திக்கும் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தன வன விலங்குகள்.
பட்டூஸ்... பிறரையும் மகிழ்விப்பது தான் பண்டிகை கொண்டாட்டம்!
- எஸ். டேனியல் ஜூலியட்