
அன்புள்ள ஆன்டி...
என் வயது, 15; அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. என் தம்பிக்கு, 10 வயதாகிறது. என்னோடு போட்டியிட்டு சிறப்பாக படிப்பான். உணவில், என் அம்மா எண்ணெய் அதிகம் சேர்ப்பதில்லை. இது பற்றி நாங்கள் விவாதித்துக் கொள்வோம்; சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை பற்றி பல தகவல்களை கூறுகிறான் தம்பி. அவற்றை எங்கு கற்றான் என்று தெரியவில்லை.
பாமாயிலா... அது, சமையலுக்கு வேண்டவே வேண்டாம் என்று கூறுவான். நெய், இதயத்துக்கு கெடுதி என்பான். சன்பிளவர் ஆயில், சமையலுக்கு உகந்தது அல்ல என, விவாதத்தில் வெட்டி முறிக்கிறான்.
இப்படி பயமுறுத்தல்களாக உதிர்க்கிறான். உலகம் முழுதும், சமையலுக்கு உதவும் எண்ணெய்களின் முழுபட்டியல் கூறி, எந்த எண்ணெய் சிறப்பானது என்பதை சிபாரிசு செய்யுங்கள்; விபரங்களை அவனிடம் அடித்துக் கூறி மடக்க உதவுங்கள்.
இப்படிக்கு,எஸ்.ராமப்ரியா மற்றும் எஸ்.கலாதர்.
அன்பு செல்லங்களே...
உலகம் முழுக்க, சமையலுக்கு உதவும் எண்ணெய்கள் ஏராளமாக உள்ளன.
அவை...
* வெண்ணெய் மற்றும் நெய்
* கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய்
* ஆனைக்கொய்யா எண்ணெய், மக்காசோளம் எண்ணெய்
* பருத்தி விதை எண்ணெய், ஆளி விதை எண்ணெய்
* திராட்சை விதை எண்ணெய், சணல் விதை எண்ணெய்
* பன்றி கொழுப்பு எண்ணெய், ஆலிவ் எண்ணெய்
* பனை எண்ணெய், கடலை எண்ணெய்
* பூசணி விதை எண்ணெய், அரிசி தவிடு எண்ணெய்
* எள் எண்ணெய் என்ற நல்லெண்ணெய்
* குங்குமப்பூ எண்ணெய், சோயா பீன்ஸ் எண்ணெய்
* சூரிய காந்தி எண்ணெய், தேயிலை விதைகள் எண்ணெய்
* வால்நட் எண்ணெய் உட்பட, பல சமையல் எண்ணெய்கள் உள்ளன.
கேரள மாநிலத்தில், சமையலுக்கு தேங்காய் எண்ணெய். மேற்கு வங்க மாநிலத்தில் கடுகு எண்ணெய் பயன்படுத்துகின்றனர்.
மேற்கண்ட பட்டியலில் இருந்து சிலவற்றை தேர்ந்தெடுத்தும் பயன்படுத்தலாம்.
சில வகை எண்ணெய்கள் பற்றி பார்ப்போம்...
ஆலிவ் எண்ணெயில், ஒவ்வாமை தடுப்பு, கிருமிகள் எதிர்ப்பு, பூரண நோய் எதிர்ப்பு, புற்றுநோய் தடுப்பு, அழற்சி எதிர்ப்பு, காமாலை தடுப்பு, நரம்புகோளாறு நீக்கம், ரத்த உறைவு தடுப்பு போன்ற பண்புகள் உள்ளன.
ஓலிக் அமிலமும், பாலி பீனால்களும் நன்மை தரும் கொழுப்புகளும், பைட்டோ கெமிக்கலும், வைட்டமின் - ஈ சத்தும் நிறைந்துள்ளன.
அடுத்த இடத்தில், ஆனைக்கொய்யா எண்ணெய் உள்ளது. நல்லெண்ணெய்க்கு மூன்றாவது இடம். இந்த எண்ணெயில், செசமின், செசமோலின் சத்துகள் உள்ளன; இவை இதய நோய் வராமல் தடுக்கும்; ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும்.
நல்லெண்ணெய், அரிசி தவிடு எண்ணெய், குசம்பப்பூ எண்ணெய் என, ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில், சமையல் எண்ணெய்களை பயன்படுத்தலாம்.
சமையலில், மிதமான காரம், கொழுப்பு, உப்பு, இனிப்பு சேர்க்கலாம்; எண்ணெயில் பொரித்தல், வறுத்தல் வேண்டாம் என தவிர்க்கலாம்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.