
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில், 1965ல், 8ம் வகுப்பில் படித்தேன்.
ஆண்டு விழாவில் நாடகம் நடத்த எங்கள் வகுப்பு தேர்வானது. அது தொடர்பான பொறுப்பு என்னிடம் வந்தது. அப்போது எங்கள் ஊர் சந்திரா தியேட்டரில் சிவாஜி நடித்த திருவிளையாடல் படம் திரையிடப்பட்டு இருந்தது. தொடர்ந்து, எட்டு நாட்கள் அதை கவனமுடன் பார்த்தேன். காட்சிகள், வசனங்கள் எல்லாம் நினைவில் பதிந்து விட்டன.
தருமிக்கு, பொற்கிழி கொடுத்த படலத்தை, 'தமிழோடு விளையாட வந்த சிவன்' என்ற தலைப்பில் நாடகமாக உருவாக்கினேன். அதற்கு உரிய வசனங்களை பேசி, காட்சிகளை விவரித்து வகுப்பாசிரியை ராஜம்மாளிடம் அனுமதி கேட்டேன். தலைமையாசிரியை சேவியர்மேரியிடம் அழைத்து சென்று ஒப்புதல் வாங்கி தந்தார். கதை, வசனம் எழுதி புலவர் வேடத்தில் நடித்தேன். நிகழ்வுக்கு தலைமை வகித்த வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அப்போதைய தலைவர் ராதாகிருஷ்ணன் வெகுவாக பாராட்டினார்.
தற்போது, என் வயது, 70; வருவாய்துறையில், துணை ஆட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் எழுதுகிறேன். இவற்றுக்கு எல்லாம் வித்திடும் வகையில் பள்ளியில் என் திறனை அங்கீகரித்து ஊக்குவித்த ஆசிரியையை போற்றி வணங்குகிறேன்.
- ம.செல்லம்பிள்ளை, தேனி.
தொடர்புக்கு: 94423 63860