
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார், சோனகன்விளை டி.டி.டி.ஏ., நடுநிலைப் பள்ளியில், 1965ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
அன்று வகுப்புக்கு, 10- நிமிடம் தாமதமாக சென்றதால் வெளியே நிறுத்தி விட்டார் வகுப்பாசிரியர். தலைமையாசிரியர் சாது சுந்தர்சிங் முன், ஆஜராகி, தாமதத்துக்கு உரிய விளக்கம் சொல்லிய பின் தான் வகுப்புக்குள் வர வேண்டும்.
அதற்காக தலைமையாசிரியர் அறை முன் காத்திருந்தேன்; வெளியே வந்தவர் என்னவென்று விசாரித்தார். பணிவுடன், 'பள்ளியிலிருந்து, இரண்டு கி.மீ., தொலைவில் இருக்கும் கிராமத்தில் இருந்து வருவதால் அடிக்கடி தாமதம் ஆகிறது...' என்று வருத்தம் தெரிவித்தேன். பரிவுடன், 'அப்பாவிடம் கேட்டு ஒரு மிதிவண்டி வாங்கிக் கொள்ளலாமே...' என அறிவுரைத்தார். குடும்ப வறுமை மனதில் நிழலாட அது பற்றி எடுத்துக் கூறினேன்.
சற்றும் யோசிக்காமல், 'உன் பிரச்னைக்கு முடிவு கட்டி விடலாம்; நாளை விடுமுறை தானே... என் வீட்டுக்கு வா...' என்றார். ஒன்றும் புரியாமல் தலையாட்டி வைத்தேன்.
மறுநாள் அவர் வீட்டுக்கு சென்று, வணக்கம் வைத்தேன். எதிர்பார்த்திருந்தவர், 'என் மகன் ஓட்டிய மிதிவண்டி இருக்கிறது. அதை எடுத்து பயன்படுத்து. இனி, ஒருநாளும் தாமதமாக வரக் கூடாது...' என அறிவுரைத்து வியப்பில் ஆழ்த்தினார்.
தற்போது என் வயது, 72; மளிகைப் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். -எதிலும் தாமதம் கூடாதென அறிவுறுத்தி, கனிவுடன் உதவிய தலைமையாசிரியரை முன்மாதிரியாக கொண்டு வாழ்வு பயணத்தை தொடர்கிறேன்!
- டி.ஜெயசிங், கோவை.
தொடர்புக்கு: 94433 61091