
மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி, காந்திநிகேதன் ஆசிரமப் பள்ளியில், 1979ல், 9ம் வகுப்பு படித்தேன். தமிழாசிரியர் மரகதவேல் கதர் வேஷ்டி, சட்டை அணிவார். முறுக்கு மீசையுடன் கம்பீரமாக காட்சி தருவார். பாடம் நடத்தும் அழகே தனித்துவமாக இருக்கும். சொற்களை திருத்தமுடன் உச்சரிப்பார். கருத்துக்களை தெளிவாக முன் வைப்பார்.
பாடம் நடத்த எந்த வழிகாட்டி புத்தகத்தையும் பயன்படுத்த மாட்டார். சொந்தமாக கேள்வி, பதில் தயாரித்து வழங்குவார். அந்த பயிற்சியால் வகுப்பு தேர்வில், 90 மதிப்பெண்கள் வரை பெற முடிந்தது. தமிழ் மொழி மீது தீராத ஆர்வம் ஏற்பட்டது.
எனக்கு, 60 வயதாகிறது. அரசு ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன். என் வகுப்புகளில் அந்த ஆசான் காட்டிய வழிமுறையை பின்பற்ற தவறவில்லை. எளிமையாக கற்பித்து, மாணவர்களின் அன்பை பெற்றேன். இதற்கு முன்னோடியாக இருந்த தமிழாசிரியரை போற்றுகிறேன்.
- ரா.ஹரிகிருஷ்ணன், மதுரை.
தொடர்புக்கு: 97893 32911