
தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டி, புனித பீட்டர் ஆரம்பப் பள்ளியில், 1996ல், 4ம் வகுப்பு படித்த போது, வகுப்பாசிரியை ஜூலியா செயல்முறையாக கற்பிப்பார். ஆர்வத்தை துாண்டி, பொது அறிவு புகட்டுவார். நாளிதழ் செய்திகளை நறுக்கி தந்து வாசிக்கச் செய்வார். வரலாற்றை நாடகமாக்கி காட்டுவார்.
சுற்றுலாவில், மதுரை நகர சித்திரத்தை மனதில் வரைந்தார். காந்திஜி மறைந்த போது அணிந்திருந்த ரத்தம் தோய்ந்த உடையை, அருங்காட்சியகத்தில் காட்டி, தியாகத்தின் பெருமையை உணர வைத்தார். ஓடுதளத்தில் ஊர்ந்த விமானத்தை துாரத்தில் இருந்தே காட்டி, 'பெரிய பசங்களாகி இதுல பறக்கணும்...' என, தின்பண்டங்கள் வாங்கித் தந்து ஆர்வத்தை வளர்த்தார்.
இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகி ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெற்றதும், எனக்கு கற்பித்தோரை சந்தித்து நன்றி கூறினேன். அந்த ஆசிரியையை மட்டும் கண்டறிய இயலாதது நிராசையாக இருந்தது.
அன்று, காந்தி கிராம பல்கலை மாணவர்களுடன் நடத்திய உரையாடலின் போது அந்த ஆசிரியை பற்றி குறிப்பிட்டேன். அங்கு படித்த அவரது மகன் அழைத்து சென்று சந்திக்க உதவினார். நெகிழ்வால் நல்லுறவை தொடர்ந்தோம்.
ஒருநாள், திடீரென அழைத்து, 'விமான நிலையத்தில் உள்ளே சென்று பார்க்க, மாணவர்களுக்கு அனுமதி வாங்கி தர முடியுமா...' என்றார். அதை நிறைவேற்றிய நாளில், நானும் பணி நிமித்தமாக, மிசவுரி செல்ல விமான நிலையம் வந்தேன். அங்கு, மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் நினைவை பகிர்ந்தேன். வாழ்வில் அபூர்வ தருணங்களில் ஒன்றாக அது அமைந்தது.
என் வயது, 38; விருதுநகர் மாவட்ட கலெக்டராக பொறுப்பு வகிக்கிறேன். ஓடுதளத்தில் மேலெழுந்த விமானத்தை காட்டி, அந்த ஆசிரியை விதைத்த நம்பிக்கையால் வாழ்வில் வெற்றியை அறுவடை செய்துள்ளேன். கிராமப்புற சிறுவர், சிறுமியரை அரவணைத்து, கற்பதை இன்றும் மகிழ்ச்சிக்குரிய அனுபவமாக்கி வரும் செயல் பரவசமூட்டுகிறது. அவரது அன்பு கனியும் முகத்தை எண்ணும் போதே, மன வானில் மகிழ்ச்சி ஊறி ததும்புகிறது.
- வீ.ப.ஜெயசீலன், விருதுநகர்.