PUBLISHED ON : மே 16, 2026

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1985ல், 11ம் வகுப்பில் சேர்ந்தேன். உயிரியல் பாட ஆசிரியை ஜீவிதா, தெளிவான விளக்கங்களுடன், மனதில் பதியும்படி கற்பித்தார். அவர் பாடம் நடத்தும் போது கவனித்தால் போதும்; தேர்வை நன்றாக எழுத முடியும்.
காலாண்டு தேர்வு முடிந்து, உயிரியல் விடைத்தாள்களை மாணவியருக்கு வழங்கினார். அப்போது, என் விடைத்தாளை எல்லாருக்கும் காண்பித்து, 'இது போல் அழகிய தெளிவான கையெழுத்துடன், முக்கியப் பகுதிகளை அடிக்கோடிட்டு எழுதினால், நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்...' என்று பாராட்டியபோது, பெருமையாக இருந்தது.
செய்முறைத் தேர்வில், கரப்பான் பூச்சியின் வாய்ப்பகுதியைப் பிளந்து, உள்ளிருக்கும் பகுதிகளை ஒரு கண்ணாடித் தகட்டில் வைத்துக் காட்ட சொன்னார்.
என் தோழி காயத்ரிக்கு, அதை சரியாக செய்ய முடியவில்லை. அவள் கேட்டதால், என்னுடைய கண்ணாடித் தகட்டை கொடுத்தேன். அதில், தான் எடுத்து வைத்திருந்த சில பகுதிகளையும் சேர்த்து வைத்து, ஆசிரியையிடம் காண்பித்தாள்.
என் தோழி அளித்த கண்ணாடி தகட்டில், கரப்பான் பூச்சியின் இரண்டு துருவத்தாடைகளில் இரண்டுமே வலது பக்க துருவத் தாடைகளாக இருந்தன. இதைப் பார்த்ததும், தில்லுமுல்லு நடந்திருப்பதை ஆசிரியை கண்டுபிடித்துவிட்டார். 'யாரிடமிருந்து இதை எடுத்து வந்தாய்...' என்று கேட்க, பயத்தில் அவள், என்னை கை காட்டிவிட்டாள்.
'உன் தோழிக்கு உதவ வேண்டும் என்றால், அவளுக்கு கற்றுக் கொடு. இப்படி செய்தால், அரசுத் தேர்வில் அவள் என்ன செய்வாள்...' என்று கேட்டார். அந்த அறிவுரை, இன்னும் என் நினைவில் நிற்கிறது.
தற்போது என் வயது, 55. முதுகலை பட்டதாரி இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். எனக்கு, உயிரியல் ஆசிரியை ஜீவிதா முன்மாதிரியாக இருந்ததால் தான், இந்த சிறப்பான நிலைக்கு உயர்ந்து, நல்ல ஆசிரியர் என்ற பெயரையும் பெற்றுள்ளேன். அவரை பின்பற்றி, என் மாணவர்களையும் சிறந்தவர்களாக உருவாக்குவேன்.
- சிவகாமசுந்தரி நாகமணி, சென்னை. தொடர்புக்கு: 98402 99929,
