
கோவை, தேவாங்க மேல்நிலைப் பள்ளியில், 2008ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
தேர்வை சந்திப்பது தொடர்பாக பெரும் குழப்பம் நிலவியது. பொதுத்தேர்வை கண்டு அஞ்சி நடுங்கி தவித்து வந்தோம். அனைத்து ஆசிரியர்களும் பொதுவாக, 'பயப்பட வேண்டாம்...' என அறிவுரைத்தனர். அது பதற்றத்தை தணிப்பதாக இல்லை.
வகுப்பாசிரியராக இருந்த கல்யாண சுந்தரம், தன்னம்பிக்கை ஊட்டி, தேர்வை எதிர்கொள்ள தக்க வழிமுறைகளை எடுத்துரைத்தார். மெல்லிய புன்னகையுடன், 'ஏற்கனவே, புத்தகத்தில் படித்ததை தானே எழுத போகிறீர்கள். அதை கண்டு பயப்படலாமா...
'எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என எண்ணக் கூடாது. தேர்ச்சி பெறுவதை தான் குறிக்கோளாக வைத்திருக்க வேண்டும்...' என தெளிவுபடுத்தினார். அதிகமாக மதிப்பெண் பெறுவதற்கு தக்க வழிகாட்டி, பயிற்சியும் தந்தார். அதன்படி செயல்பட்டு தேர்ச்சி பெற்றேன்.
எனக்கு, 32 வயதாகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வியாபார தொழில் செய்து வருகிறேன். பள்ளியில் தேர்வை எதிர்கொள்ள பெற்றிருந்த பயற்சி, வாழ்வை மேம்படுத்த உதவுகிறது. அதற்கு நம்பிக்கை ஊட்டிய வகுப்பாசிரியரை மனதில் ஏந்தி வாழ்கிறேன்.
- து.ஸ்ரீராமச்சந்திரன், கோவை.
தொடர்புக்கு: 99408 23373