
சிதம்பரம், ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியில், 1988ல், 9ம் வகுப்பு படித்த போது, ஒவ்வொரு நாளும் கிராமத்தில் இருந்து வகுப்புக்கு சீக்கிரம் வந்து விடுவேன்.
அருகில் இருக்கும் நுாலகத்தில் செய்திதாள் வாசிப்பேன். இதை கவனித்திருந்த தபால்காரர் பாலசுப்பிரமணியன், என் ஆர்வத்தை பாராட்டி தட்டிக் கொடுத்தார். அன்று முதல் அவருடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டேன்.
ஒரு நாள், 15 காசு மதிப்பில் அஞ்சல் அட்டைகள் கொடுத்து, 'வார இதழ்களில் வரும் கேள்வி - பதில் பகுதிக்கு எழுது...' என்றார். திறன் மீது சந்தேகம் எழுந்தது. தயங்கிய நின்ற போது நம்பிக்கையூட்டினார். எழுதிய படைப்புகளை திருத்தி, வார இதழ்களுக்கு அனுப்ப உதவினார். அவை பத்திரிகைகளில் பிரசுரமானதும், என் பெயரை பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை.
வகுப்பு நண்பர்கள் யாரும் என் முதல் முயற்சியை ஏற்க மறுத்தனர். ஆனால், தட்டிக் கொடுத்து பாராட்டினார் தபால்காரர்.
இன்று, என் பெயர் வராத தமிழ் இதழ்களே இல்லை. வடிவான என் கையெழுத்தை பாராட்டி, பிரபல இதழாளர் அந்துமணி எழுதிய கடிதத்தை அந்த தபால்காரரிடம் காட்டிய போது, 'முயற்சி, ஆர்வம் தான் இதற்கெல்லாம் காரணம்...' என உற்சாகப்படுத்தினார்.
இப்போது என் வயது, 53; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். என் படைப்பு ஆர்வத்தை வெளிக்கொண்டு வந்த தபால்காரரின் நல் எண்ண செயல்பாட்டை வணங்குகிறேன். திறனை அறிந்து விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்ற பாடத்தை கற்றுக்கொண்டுள்ளேன்.
- பொ.பாலாஜி கணேஷ், சிதம்பரம்.
தொடர்புக்கு: 98425 50844