
நாகர்கோவில், கோட்டார், டி.வி.டி.பள்ளியில், 1977ல், 7ம் வகுப்பு படித்த போது தமிழாசிரியராக இருந்தார் வள்ளிநாயகம்.
என் தமிழ் ஆர்வம், பற்று, திறன் கண்டு, பேச்சு, கட்டுரை போட்டிகளில் பங்கேற்க துாண்டினார். தக்கவாறு வழிகாட்டி பயிற்சிகள் தந்தார். பள்ளி ஆண்டு விழா மேடையில் உரையாற்ற வாய்ப்பு வழங்கினார்.
வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் வழங்கினார். இதற்காக, திருவனந்தபுரம் வானொலி நிலையத்துக்கு அழைத்து சென்று உற்சாகம் ஊட்டினார். இது வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்படுத்தியது. பின்னாளில், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி வானொலி நிலையங்களில் நிகழ்ச்சிகள் வழங்கி புகழ் பெற அடிக்கல்லாக அமைந்தது.
என் வயது, 60; தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தமிழ், ஆங்கில மொழிகளில் பல நுாறு ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளேன். புத்தகங்களும் எழுதி வெளியிட்டுள்ளேன். தினமலர் நாளிதழில் கட்டுரை, அறிவியல் செய்திகள் எழுதியுள்ளேன்.
முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பாராட்டை பெற்றது என் புத்தகம். பிரபல இதழாளர் அந்துமணியின் பாராட்டை, 'அன்றாட வாழ்வில் 50 மரங்கள்!' என்ற தலைப்பிலான கட்டுரை பெற்றுள்ளது. இந்த சாதனைகள் புரிய துாண்டுகோலாக இருந்த தமிழாசிரியரை வணங்கி வாழ்கிறேன்.
- சி.சுவாமிநாதன், மதுரை.