
தரைவாழ் உயிரினங்களில் மிகப்பெரியது யானை. இதன் தும்பிக்கை 1.5 லட்சம் தனித்தனி தசை நார், நரம்புகள் உடையது. அதன் துணையால் தரையில் கிடக்கும் சிறிய நாணயத்தையும் எடுக்க முடியும். புல்லையும் பிடுங்க இயலும். பெரிய மரத்தையும் முறிக்க முடியும்.
சுவாசிப்பதில் துவங்கி இலைகளை கொய்தல், நீராடல், மோப்பம் பிடித்தல், உண்ணுதல் என, தும்பிக்கையின் பணி தனித்துவமானது. கோபம், மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் பயன்படுகிறது. ஒரு ஊது கொம்பு போல், 'வீர்' என ஒலி எழுப்பி உணர்வை காட்டுகிறது.
இரு துவாரங்கள் உடையது தும்பிக்கை. அதன் நுண் உணர்வு மிக்க நுனியால் இலை, தழை பொருட்களை உண்ணத்தக்கதா என புரிந்து கொள்ளும். தலையை திருப்பாமல் எல்லா திசையிலும் தகவலை அறிய உதவுகிறது. பகை விலங்கை நோட்டமிடும். ஐந்து கி.மீ., துாரத்தில் நீர் இருந்தால் கூட கண்டறியும். தும்பிக்கையை பயன்படுத்தி, 75 லிட்டர் தண்ணீரை ஒரே மூச்சில் குடிக்கும்.
யானையின் தோல், 25 மி.மீ., தடிப்பானது. ஈ, கொசு கடித்தாலும் உணர்ந்து கொள்ளும்; பூச்சி கடித்தால் குச்சி, சிறு மரக்கிளையை ஒடித்து சொறிந்து கொள்ளும். அரிக்கும் பகுதியை பாறையில் தேய்த்து நிவாரணம் பெறும். இந்தப் பழக்கங்களே, யானை அறிவுமிக்கது என காட்டுகின்றன.
நாள் ஒன்றுக்கு, 250 கிலோ உணவு சாப்பிடும்; 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். உணவில், 10 சதவீதம் விதை மற்றும் குச்சிகள் இருக்கும். உண்ணும் உணவால் வாழ்நாளில், 18 லட்சத்து, 25 ஆயிரம் மரங்கள் வரை வளரக் காரணமாகிறது.
யானை, 22 மாதங்கள் கருவை சுமக்கும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை குட்டி போடும். நோயுற்ற யானையை மற்றவை உதவி ஆறுதல் படுத்தும். இயற்கையை சமநிலை படுத்துவதில் யானையின் பங்கு மிகப் பெரிது.
கேரள அரசு முத்திரையில் இரண்டு யானைகள் உள்ளன. தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், காட்டுயானை வயலுக்குள் வராமல் தடுக்க, ஒரு வகை தேனீ வளர்க்கின்றனர். அவற்றின் ரீங்கார சத்தம் கேட்டால் யானைகள் பாய்ந்தோடி பதுங்கிவிடும்.
- தங்க.சங்கரபாண்டியன்