
அன்புள்ள ஆன்டி...
என் வயது 15; பிரபல தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன். ஒவ்வொரு நாளும் ஷூ அணிந்து தான் பள்ளிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. வீட்டுக்கு வந்ததும் செருப்பு அணிய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இப்படி தொடர்ந்து பாத அணிகள் அணிவது கால்களை பலவீனப்படுத்துகிறது.
ஒரு நாள் தெருவில் சென்றபோது ஒரு முதியவர், 'செருப்பில்லாமல், புல் தரையில் நடந்து பார்... அதன் சுகமே தனி. செருப்பணிந்தால் கால்கள் குறுகி சிறுத்து விடும். ஒரு போதும் செருப்பணியாதே...' என்று அறிவுரைத்தார்.
அந்த அறிவுரையை உண்மையில் ஏற்று நடைமுறைப்படுத்த முடியாது. இந்த நிலையில் செருப்பு பற்றிய குழப்பம் என் மனதில் முள்ளாய் குத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் செருப்புடனா பிறந்தோம் என்ற எண்ணம் அடிக்கடி எழுகிறது. இது பற்றிய உண்மையை தெளிவுப்படுத்துங்கள்.
இப்படிக்கு,
எஸ்.ஆர்.செல்வபெருந்தகை.
அன்புள்ள மகனே...
காலில் அணியும் செருப்பை, காலணி, பாதுகை, பாதரட்சை, சிறு செருப்படைப்பூடு, சப்பாத்து என்ற பெயர்களிலும் அழைப்பர்.
கால் பகுதியில் கணுக்கால் மற்றும் பாதத்தை முழுமையாக மூடும் காலணியை ஆங்கிலத்தில் பூட்ஸ் என்பர். இதை ஷூ எனவும் அழைப்பர்.
மனித குலம், 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே செருப்பு அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாறை குகைகளில் ஆதிமனிதன் செருப்பு அணிந்திருந்ததை குறிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. கி.மு.1600ல் மெசோபட்டோமியா பகுதி மலையில் வாழ்ந்த மனிதர்கள் செருப்பு அணிந்திருந்ததை காட்டும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அமெரிக்கா, மசாசூசெட் பகுதியில் கி.பி., 1760ல் முதல் ஷூ தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. காலணிகள், ஆடு, மாட்டுத்தோல், முதலை, பாம்புத்தோல், வெல்வெட், பட்டு, வல்கனைஸ்டு ரப்பர், பைபர், பிளாஸ்டிக், செயற்கை தோல், லினன், சாட்டின், நைலான், காலிசு, கம்பளி போன்ற மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஆண்களின் கால் அளவு, 5, 6, 7, 8, 9, 10, 11 எனவும், பெண்களின் கால் அளவு 4, 5, 6, 7, 8 எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.
காலணியின் உலக வர்த்தகம் பல ஆயிரம் கோடி ரூபாயில் நடக்கிறது. உலக மக்கள் தொகையில் 100 கோடி பேர் மட்டுமே செருப்பு அணிவதில்லை என கணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில், நைக்கி, புமா, பாட்டா, ரீபோக், குசி, அடிதாஸ் போன்ற நிறுவனங்களும், இந்திய அளவில் காதி, காதிம் நிறுவனங்களும் காலணி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. உலக அளவில் இவற்றின் வியாபாரம் விரிந்து பரந்துள்ளது.
காலணி அணிவது நல்லதா, கெட்டதா எனக் கேட்டிருக்கிறாய்.
காலணி அணிவது மிக மிக நல்லது. அது கால்களை பாதுகாக்கும் ஒப்பற்ற நண்பனாக உள்ளது. டிபியாசிஸ் ஆன்ட்ரீயர், டிபியாலிஸ் போஸ்ட்டீரியர், பிளக்சார் டிஜிடோரியம் லாங்கஸ், எக்ஸ்டீரியர் ஹலோசிஸ் லாங்கஸ், பளக்சார் ஹலோசிஸ் லாங்கஸ் என கால் தசைகளை பாதுகாக்கிறது. குப்பை, துாசி, குளிர், வெப்பம் போன்றவற்றிலிருந்து பாதுகாத்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. காலணி ஒரு மனிதனின் தோரணையை மிடுக்காக்குகிறது.
பாலைவனத்தில், காடுகளில், மலைகளில், தீயணைப்பு பணிகளில் அணிய விசேஷ பூட்ஸ் தயாரிக்கப்படுகிறது. ரத்த ஒட்டத்தை சரி செய்ய அக்குபஞ்சர் காலணி, நீரழிவு நோயாளிகளுக்கு உகந்த காலணிகளும் கூட இப்போது கிடைக்கின்றன.
உடற்பயிற்சி செய்வோர், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ், ஓட்ட பந்தய வீரர்கள், விசேஷ ஷூ அணிகின்றனர். அது அவர்களின் திறன்களை கூட்டுகிறது.
எப்போதாவது காலணி இல்லாத கால்களை வெதுவெதுப்பான டெட்டால் நீரால் கழுவி, ஓய்வாய் சிறிது நேரம் நடந்து பார்க்கலாம். மற்றபடி காலணி, கர்ணனின் கவச குண்டலம் போல, மனிதனுடன் ஒட்டிப் பிறந்தது என தெளிவு பெறு. மனிதனின் ஆக்கப்பூர்வ செயல்களுக்கு அடிப்படையாக அமைவது காலணி என்பதை மனதில் கொண்டு செயல்படு!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்!