
பூனை குடும்பத்தை சேர்ந்த மிகப்பெரிய உயிரினம் புலி. ஆசிய காட்டுப் பகுதியில் காணப்படுகிறது. ஆரஞ்சு, மஞ்சள் சேர்ந்த நிறத்தில் கறுப்புக் கோடுகளுடன் காணப்படும். வெள்ளை நிற புலிகளும் உண்டு.
புலியின் ஆயுள், 15 முதல், 25 ஆண்டுகள். ஒன்றின் உடலிலுள்ள கோடுகள் மற்றொன்றில் இருக்காது. காடுகளில் தனித்து வேட்டையாடும். இதன் கர்ப்ப காலம், 103 நாட்கள்; இரண்டு முதல், ஆறு குட்டிகள் வரை ஈனும். ஒரு முறை, 18 கிலோ எடை அளவு மாமிசத்தை உண்ணும்.
புலியின் கண்களில் டபீடம் லுாசிடம்மால் என்ற சிறப்பு லேயர் உள்ளது. இதனால், மனிதனை விட, ஆறு மடங்கு அளவு உன்னிப்பாக பார்க்க முடியும். 30 சதுர கி.மீ., பகுதியை வாழ்விட எல்லையாக கொள்ளும். மற்ற புலிகள் எல்லைக்குள் வந்தால் சண்டையிடும்.
புலிக்கு தண்ணீர் என்றால் மிகப் பிரியம். நீர் நிலைகளுக்கு அருகில் தண்ணீரை குடித்து காத்திருக்கும். அருகில் வரும் எந்த இரையையும், நீருக்குள் விழ வைத்து, எளிதாக பிடிக்கும். முதலை, கரடி, நரி மற்றும் ஓநாயும் புலிக்குட்டிக்கு எதிரி.
புலியால், 30 அடி துாரத்தில் உள்ள இரையை கூட குறி வைத்து தாக்க முடியும். இரையின் பின் கழுத்தில் கடித்து, முதுகெலும்பை முறித்து அல்லது சுவாசத்தடை ஏற்படுத்தி கொன்று விடும்.
இரையை தேடி புல்வெளிக்கு இடையே பதுங்கும் போது, மற்ற விலங்குகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இது மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் ஓடும். இரையை துரத்தும் போது, 10 மீட்டர் உயரம் வரை தாவும். மான், காட்டுப் பன்றி, ஆடு, மாடு, இளம் யானை, கரடியை உண்ணும். புலி இனத்தைக் காக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது அரசு.
- எஸ்.ராமதாஸ்