
வீட்டு கொல்லைப்புறத்தில் வாழை மரம் குலை தள்ளியது.
அதை கண்டதும் ஆனந்தமடைந்தார் நெடுமாறன். நீண்ட உழைப்புக்கு பலன் கிடைத்ததாக கருதினார்.
அதை யாரும் வெட்டி கொண்டு போய் விட கூடாது என கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டனர் அவரது குடும்பத்தினர்.
வாழை பூவில் அமர்ந்த வண்டுகளும், தேனீக்களும் தேன் உறிஞ்சி குடித்தன.
சந்தோஷப்பட்டது வாழைமரம்.
பூக்கள் பச்சை நிற பிஞ்சுகளாகின.
நாளடைவில் நன்றாக முற்றி காயாக மாறின.
முற்றிய காய்கள் பழுக்க துவங்கின.
பச்சை நிறத்தில் இருந்து மெல்லிய மஞ்சள் நிறத்துக்கு மாற துவங்கின.
அப்போதும் மகிழ்ந்தது அந்த வாழைமரம்.
பழங்கள் கனிந்த பின், வாழைப்பழ தாரை வெட்டினார் நெடுமாறன்.
குடும்பத்தாருடன் கனிந்த பழத்தை சுவைத்து சாப்பிட்டார்.
தோல் தேவையற்றது என கண்டபடி வீசி எறிந்தனர்.
அதை கண்டதும் வருந்தியது வாழைமரம்.
சத்து மிக்க தோல்கள் சில உயிரினங்களுக்கு உணவாகும். அது வீணாக போகிறதே என கவலையில் ஆழ்ந்தது.
அந்த நேரம்...
பசியோடு அங்கு வந்தது ஒரு வெள்ளாடு.
தெருவில் வீசப்பட்டிருந்த வாழைப்பழ தோல்களை வயிறு முட்ட சாப்பிட்டது.
அதுவே, உயிர் வாழ போதுமானதாக இருந்தது. கழிவாக சாலையில் கிடந்த தோல்கள் துப்புரவு செய்யப்பட்டன.
இதைக்கண்ட வாழைமரம் மிகவும் மகிழ்ந்து நின்றது.
குழந்தைகளே... இயற்கையின் எல்லா பாகங்களும் பயன்படுகின்றன. விரயம் செய்யாமல் பயன்படுத்த வேண்டும்.
- எஸ்.டேனியல் ஜூலியட்