
விருதுநகர் மாவட்டம், குறிச்சியார்பட்டி, இந்து துவக்கப் பள்ளியில், 1985ல், 3ம் வகுப்பு படித்தேன். அப்போது, 5ம் வகுப்பு படித்த காந்திமதி அழகிய பை ஒன்று வைத்திருந்தாள். அதில் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆசை ஏற்பட்டது. மதியம் உணவு இடைவேளையின் போது திறந்து பார்த்தேன். ஒரு மணிபர்ஸ் இருந்தது. எடுத்து என் பைக்குள் மறைத்து கொண்டேன்.
மாலையில் வீடு திரும்பியதும் மாடியில் சென்று திறந்து பார்த்தேன். கொஞ்சம் சில்லறை, எழுதும் குச்சிகள், அழிப்பான், பென்சில் பொருட்கள் இருந்தன.
மீண்டும் மறைத்து துாங்கி விட்டேன். மறுநாள் பள்ளி சென்றதும் அது பற்றி புகார் எழுந்திருந்ததை அறிந்தேன். அது என் பைக்குள் இருந்ததை கண்டுபிடித்து வகுப்பாசிரியர் என்.பாலகிருஷ்ணனிடம் தெரிவித்தனர் சக மாணவர்கள்.
அருகே அழைத்தவரிடம் பயந்தபடி போனேன். அடி வாங்குவது உறுதியாகிவிட்டதால் நடுங்கியபடி நின்றேன். மிக நிதானமாக விசாரித்தவரிடம் உண்மையை கூறினேன். தொடர்ந்து, 'அடுத்தவர் பொருளைக் கேட்காமல் எடுத்தால், அதற்கு என்ன பெயர் தெரியுமா...' என்று கேட்டார்.
பதில் சொல்லாமல் விழித்து நின்றபோது, 'உரியவரிடம் பர்சை கொடுத்து மன்னிப்பு கேள்...' என்று என் தவறை உணர வைத்தார். அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்ற நீதி மனதில் பதிந்தது.
எனக்கு, 48 வயதாகிறது. அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறேன். ஒழுக்க நெறிகளை பள்ளியிலும், வீட்டிலும் கடைபிடிக்க உதவிய அந்த ஆசிரியர் என் தந்தை தான். நலமுடன் வாழும் அவரை நாளும் வணங்கி மகிழ்கிறேன்!
- பா.ராமசுப்ரமணியன், விருதுநகர்.
தொடர்புக்கு: 98431 83480