
திண்டுக்கல், ஜி.டி.என்.அரசு கலைக்கல்லுாரியில், 2003ல் பி.ஏ.வரலாறு படித்த போது, பேராசிரியராக இருந்தார் பாலகுருசாமி. வரலாற்று நிகழ்வுகளை சுவை பட கூறுவார். முக்கிய ஆண்டுகளை நினைவில் பதிக்க பயனுள்ள குறிப்புகள் தருவார்.
ஒரு நாள், 'கிராமப்புறத்தில் இருந்து வரும் நீங்கள் ஆங்கில மொழிப்புலமையை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இனி வரும் நாட்களை பயனுள்ள வகையில் செலவிடவும், திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் சில திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளேன்...' என்றார். மிகவும் ஆர்வமானோம்.
ஆங்கில நாளிதழில் வரும் செய்திகளில் ஒன்றை தமிழில் மொழிபெயர்த்து வகுப்பில் வாசித்து காட்ட சொன்னார். ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது. நாட்கள் செல்ல செல்ல சுவாரசியமானது. அன்றாடம், 'டிவி' செய்திகளை கவனித்து, நாட்டு நடப்புகளை அறிய அறிவுறுத்தினார். பொதுஅறிவு சார்ந்த வினாடி - வினா நடத்தி, சொந்த செலவில் பரிசுகள் வழங்கினார். கருத்துள்ள விவாதங்களை பட்டிமன்றம் போல் நடத்துவார். இவை எல்லாம் தொடர்பியல் திறனை மேம்படுத்தியது. போட்டி தேர்வுகளுக்கு தயாராக பேருதவி புரிந்தது.
என் வயது, 39; தமிழக தீயணைப்பு துறையில் பணிபுரிகிறேன். கல்லுாரியில் படித்தபோது அந்த பேராசிரியர் வகுத்து கொடுத்த நெறிமுறையால் வாழ்வில் உயர முடிகிறது. சமீபத்தில், முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி அந்த கல்லுாரி வளாகத்தில் நடந்தது. உடன் படித்தோர் பலவகை பணிகளில் உயர்ந்திருப்பதை கண்டேன். தற்போது, அதே கல்லுாரியில் முதல்வராக பணிபுரியும் அந்த பேராசிரியரை வணங்கி பெருமிதமடைகிறேன்.
- ரா.ராஜேஷ்குமார், நிலக்கோட்டை.
தொடர்புக்கு: 99425 32939