
தூத்துக்குடி, சுப்பையா வித்யாலயம் பள்ளியில், 1960ல், 6ம் வகுப்பு படித்தபோது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. அதில் பங்கேற்கும் எண்ணம் இன்றி பார்வையாளனாக அமர்ந்திருந்தேன். அப்போது, 'மியூசிகல் சேர்' என்ற போட்டி துவங்கும் அறிவிப்பு வந்தது. வகுப்பாசிரியர் கோபாலகிருஷ்ணன் அதில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு அளித்தார். முயன்று, மூன்றாமிடம் பெற்றேன்.
அடுத்து, வாழைப்பழ ஓட்டம் என்ற வினோத போட்டி நடக்க இருந்தது. போட்டி துவங்கும் பகுதியிலிருந்து, 200 அடி துாரத்தில் ஒரு கோடு போடப்பட்டிருக்கும். அதை தாண்டி பெஞ்சில் வாழைப் பழங்கள் வைக்கப்பட்டிருக்கும்.
வேகமாக ஓடி கோட்டிற்கு அந்தப்பக்கம் சென்று வாழைப் பழத்தை தின்ற பின், மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைய வேண்டும். முதலில் வரும் மூன்று பேருக்கு பரிசு என்பது தான் போட்டி. இதிலும் பங்கேற்றேன்.
போட்டியின் துவக்கமாக, 'ஒன்... டூ... த்ரி...' சொல்வர் என காத்திருந்தேன். ஆனால், நடந்தது வேறு. ஒரு வெடிச்சத்தம் கேட்டது. எல்லாரும் ஓடினர். அதை எதிர்பார்க்காததால் நொடிப்பொழுது திகைத்து, சுதாரித்தபடி நானும் ஓடினேன். பின் தங்கியதால் பரிசுக்கு தேர்வாகவில்லை. ஒரு வாழைப்பழம் மட்டும் கிடைத்தது.
துவண்டிருந்த என்னை முதுகில் ஆதரவாக தட்டி, 'கவலைப்படாதே... அடுத்த ஆண்டு முயன்று வெற்றி பெறலாம்...' என தேற்றினார் வகுப்பாசிரியர். அந்த வார்த்தைகள் தந்த உற்சாகத்தால் விடாமுயற்சியுடன் பயிற்சிகள் எடுத்தேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் சாதித்தேன்.
என் வயது 75; இந்தியன் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பள்ளியில் படித்த காலத்தில் என் முன்னேற்றத்தில் அக்கறை காட்டி உதவிய ஆசிரியர் கோபாலகிருஷ்ணனை நினைவு கூர்வதில் பெருமை அடைகிறேன்.
- டி.வரதராஜன், சென்னை.

