
மதுரை, சுப்பிரமணியபுரம் குருகுலம் பள்ளியில், 1969ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
வகுப்பாசிரியையாக இருந்த மரகதம் பொறுமை மிக்கவர். புரியும்படி பாடங்களை நடத்துவார். அன்று திடீரென என் வலதுகை மரத்து செயலிழந்து விட்டது. பிசைந்த சாதத்தை வாயருகே கொண்டு போனால், கை தன்னிச்சையாக காதரகே சென்றுவிடும். எழுதவும், சாப்பிடவும் இயலாமல் அவதிப்பட்டேன்.
கோரிப்பாளையம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்தோம். நரம்பு பிரச்னை என்பதை கண்டறிந்து மருந்து, மாத்திரைகள் எடுத்து வந்தேன்.
இதையறிந்து வீடு தேடி வந்த வகுப்பாசிரியை, 'ஒரு மாதத்தில் ஆண்டு தேர்வு நடக்க இருக்கிறது. எழுதினால் தான் தேர்ச்சியடைய முடியும். நீ நன்றாகப் படிப்பவள். முயற்சியுடையவள்... இப்போதிருந்தே இடது கையால் எழுதிப் பழகு...' என கனிவுடன் அறிவுரைத்தார்.
கடும் முயற்சி எடுத்தேன். கை எழுத்து கோணல் மாணலாக இருந்ததால் கண்ணீரில் உழன்றேன். தைரியம் கூறினார் வகுப்பாசிரியை. கூடுதலாக அரை மணி நேரம் தந்து, நிதானமாக எழுத உதவினார். அதன் பலனாக தேர்ச்சி பெற்றேன். சிகிச்சையால் நரம்பு பாதிப்பும் சீரானது.
எனக்கு, 66 வயதாகிறது. இல்லத்தரசியாக இருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று வகுப்பாசிரியை மரகதத்துக்கு நன்றி சொல்வதை வழக்கமாக்கியுள்ளேன். அன்று ஊட்டிய நம்பிக்கையும், தைரியமும் தான், இன்றும் என்னை வழி நடத்துகிறது .
- ச.ஜெயலட்சுமி, சென்னை.

