sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

வினோத தீவு! (1)

/

வினோத தீவு! (1)

வினோத தீவு! (1)

வினோத தீவு! (1)


PUBLISHED ON : ஆக 02, 2025

Google News

PUBLISHED ON : ஆக 02, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசலில் கார் வரும் சத்தம் கேட்டது.

அலுவலகத்திலிருந்து அப்பா வந்து விட்டதை அறிந்தாள் ரீனா. ஆர்வமுடன் எதிர் கொண்டு வந்தாள்.

அப்பாவின் முகத்தில் மகிழ்ச்சியை கவனித்தவள், ''லீவு கிடைத்து விட்டதா...'' என கேட்டாள்.

''ஆமாடா செல்லம்... 10 நாள் விடுப்பு கிடைத்திருக்கு...''

''சூப்பர்... அப்போ நாம் திருநெல்வேலி தாத்தா, பாட்டி வீட்டிற்கு போகிறோமா...''

''இல்லடா... அந்த திட்டம் மாறி விட்டது...''

அப்பா இப்படி சொன்னதும் ரீனா முகம் சற்று வாடியது.

''தாத்தா வீட்டுக்கு போய், பாட்டி கையால், இட்லி, சாம்பார், எள்ளுப்பொடி சாப்பிட வேண்டும். ஆழ்வார்குறிச்சியில் நான் படித்த பள்ளியையும், பள்ளி தோழர் - தோழியரையும் பார்க்க வேண்டும். ஆமை வடை, கார வடை எல்லாம் சுவைக்க வேண்டும். தியேட்டரில் சினிமா பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஆசையுடன் இருந்தேன்...''

ஏமாற்றத்தை சொன்னாள் ரீனா.

''உன் ஆசையை அடுத்த விடுமுறைக்கு நிறைவேற்றி விடலாம்...''

செல்லமாய் அவள் கன்னத்தில் தட்டினார் அப்பா.

டில்லியில், 10ம் வகுப்பு படிக்கிறாள் ரீனா. விடுமுறைக்கு, சொந்த ஊரான திருநெல்வேலி அருகே தாத்தா, பாட்டி வீட்டுக்குப் போகலாம் என நினைத்திருந்தாள். அப்பா சொன்னதைக் கேட்டதும் அவள் ஆர்வம் குறைந்து விட்டது.

''திருநெல்வேலி ட்ரிப்புக்கு பதிலாக உனக்கு வேறு ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறேன்...''

தடாலென சொன்ன அப்பாவை நிமிர்ந்து பார்த்தாள் ரீனா.

''என்ன...''

''இந்த விடுமுறைக்கு குடும்பத்துடன் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா செல்லப் போகிறோம்...''

லட்சத்தீவு சுற்றுலா என்றதும் அதிக ஆர்வமாக இருந்தது.

ஆனாலும், தாத்தா, பாட்டியைப் பார்க்கும் வாய்ப்பு தள்ளிப் போவது சற்றே சோர்வை தந்தது.

''லட்சத்தீவு சுற்றுலா உனக்கு சர்ப்ரைசாக இல்லையா...''

''சர்ப்ரைஸ் தான் அப்பா. அந்த வெள்ளை மணல் கடற்கரை அழகையும், கடலில் அனுபவிக்க கூடிய நீர் விளையாட்டுகளையும் பற்றி நிறையவே படித்திருக்கிறேன். வீடியோக்களும் பார்த்திருக்கிறேன். ஆனாலும், என் வகுப்பு தோழி இல்லாமல்...''

''நட்புக்கு நீ எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பாய் என்று எனக்கு தெரியும். உன் வகுப்பு தோழி மாலினியும், நம்மோடு வருகிறாள்...''

அப்பா சொன்னதும், 'குபீர்' என மலர்ந்தாள்.

''நிஜமாகவா...''

''ஆமாம்... சொல்லப்போனால் இந்த லட்சத்தீவு சுற்றுலாவுக்கு ஐடியாவை கொடுத்ததே, மாலினியின் அப்பா தான். அவங்களும் குடும்பத்துடன் நம்முடன் சுற்றுலா வருகின்றனர்...''

''லட்சத்தீவுற்கு எப்படி போகிறோம். எங்கே தங்குறோம். எத்தனை நாள்...''

அடுக்கடுக்காய் கேள்விகளை ஆர்வமுடன் கொட்டினாள் ரீனா.

''இங்கிருந்து கொச்சி செல்கிறோம். அங்கிருந்து லட்சத்தீவுக்கு செல்லப்போகிறோம். எல்லாமே விமான பயணம் தான்...''

அப்பா சொல்லியதும் மகிழ்ச்சியுடன் 'உம்...' கொட்டினாள் ரீனா.

''லட்சத்தீவு பரப்பு இந்தியாவுடன் சேர்ந்தது தான் என்றாலும், அங்கு செல்வதற்கு பசுமை வரி செலுத்தி, முன் அனுமதி பெற வேண்டும். அதற்கு 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பம் சமர்பித்துள்ளோம். தங்குவதற்கான ஏற்பாடு, உணவு, சுற்றி பார்க்க வேண்டிய இடங்களுக்கு அழைத்து செல்ல தமிழ் தெரிந்த வழிகாட்டி என எல்லாவற்றுக்கும் ஒரு சுற்றுலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறோம்...'' என்றார் அப்பா.

''எத்தனை நாட்கள் என்று சொல்லவில்லையே...''

''மொத்தம், ஏழு நாட்கள். இரண்டு நாள் பயணத்தில் கழிந்து விடும். முழுமையாக, ஐந்து நாட்கள் அங்கே இருப்போம்...''

''லட்சத்தீவு என்றாலே, 'ஸ்கூபா டைவிங்' என்ற நீருக்கடியில் நீந்தும் விளையாட்டு ரொம்ப பிரபலம். நான் அந்த விளையாட்டில் பங்கேற்க விரும்புகிறேன் அப்பா...''

''நீ கேட்பாய் என்று தெரியும். உனக்கும், மாலினிக்கும் அதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்தாயிற்று...''

சிரித்தார் அப்பா.

''அதற்கு முன்அனுமதி தேவையா...''

''ஆமாம் ரீனா... வயது, உடல் தகுதி எல்லாம் பார்ப்பர்...''

''ஓ... அப்படியா...''

உற்சாகமானாள் ரீனா.

அந்த நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

கொ ச்சியிலிருந்து புறப்பட்ட சிறிய வகை விமானத்தில் இரு குடும்பத்தினரும் லட்சத்தீவுகளுக்கு பயணித்தனர்.

ரீனாவைப் போலவே, மாலினியும் அந்த குடும்பத்தில் ஒரே குழந்தை தான்.

இருவரும் ஒரே பள்ளியில் பயிலுகின்றனர். இருவரின் அப்பாக்களும், ஒரே அலுவலத்தில் பணிபுரிகின்றனர்.

அரபிக்கடலின் மேல் பறந்த அந்த விமானத்தில், அவர்களுடன் சேர்த்து, 16 பேர் தான் இருந்தனர்.

''விமானம் ரொம்பவும் குட்டியாக இருக்கிறதே...''

புன்னகையுடன் கேட்டாள் மாலினி.

''லட்சதீவுகளில் அகட்டி என்ற தீவில் தான் விமான நிலையம் இருக்கிறது. அங்கு ஒரு சமயத்தில், 50 பயணியர் மட்டும் தான் வந்து செல்ல முடியும். அந்த அளவுக்கு சிறிய விமானம் நிலையம் அது. அதனால் சிறிய வகை விமானங்கள் தான் இயக்கப்படுகிறது..'' என்றாள் ரீனா.

''ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது...''

''சிறிய விமான நிலையம் என்பதில் உனக்கு என்ன சந்தோஷம்...''

''பிளேடு போடாதே. இரண்டு புறமும் கடல் நீர் இருக்க, அதன் நடுவே உள்ள ஓடுபாதையில் இந்த விமானம் இறங்குவது ரொம்ப பிரமிப்பாக இருக்கும்...''

''உனக்கு தண்ணீர் என்றால் பயமா...''

''தண்ணீர் எல்லாம் பயமே கிடையாது. எனக்கு நன்றாக நீந்த தெரியும். ஏன் உனக்கு தண்ணீரில் இறங்க பயமா...''

சந்தேகத்துடன் கேட்டாள் மாலினி.

''தண்ணீருக்கெல்லாம் எனக்கு பயம் கிடையாது. நாய்க்கு தான் பயம்... அதுவும் தெரு நாய்க்கு...''

''நல்லவேளை லட்சத்தீவில் நாயும், பாம்பும் கிடையாது...''

ஒன்றரை மணி நேர பயணத்தில் அகட்டியை நெருங்கியது விமானம்.

அது தரையிங்கும் அழகை ரசிக்க ஏதுவாக, காலியாக இருந்த ஜன்னலோர இருக்கைகளில் அமர்ந்து, 'சீட் பெல்ட்' அணிந்து கொண்டனர் மாலினியும், ரீனாவும்.

இருபுறமும் கடல் நீர் தெரிய, நடுவிலிருந்த ஓடுபாதையில் தரையிறங்கியது விமானம்.

பயணத்தில், ஒரு வினோதத்தை சந்திக்கப் போகிறோம் என்றோ, அதன் காரணமாக மீண்டும் இங்கு வரப்போகிறோம் என்றோ, அதிரடி சாகசங்களை செய்யப் போகிறோம் என்றோ, ரீனாவுக்கும், மாலினிக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை.

- தொடரும்...

- நரேஷ் அருண்குமார்







      Dinamalar
      Follow us