PUBLISHED ON : ஏப் 11, 2026

உலகெங்கும் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்லும் பஸ், மஞ்சள் நிறத்தில் இருப்பதை காணலாம்.
அமெரிக்காவில், 1939ல், டாக்டர் பிராங்க் டபிள்யூ. சிர் தலைமையில் நடந்த மாநாட்டில், 50க்கும் மேற்பட்ட நிறங்கள் சோதிக்கப்பட்டன. அதில் பள்ளி பஸ்களுக்கென பிரத்யேக மஞ்சள் நிறம் தேர்வு செய்யப்பட்டது.
மனித கண்ணுக்கு மிக விரைவாகவும், தொலைவிலிருந்தும் புலப்படுவதால் இந்நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது. குறிப்பாக, அதிகாலை, மாலை நேர மங்கலான வெளிச்சம், மூடுபனி அல்லது மழையின் போது, மற்ற நிறங்களை விட, மஞ்சள் மிக தெளிவாக தெரியும்.
மனித கண்ணில் உள்ள சிவப்பு மற்றும் பச்சை ஒளி உணரிகளை, ஒரே நேரத்தில் துாண்டுவதால், மூளை இந்த நிறத்தை வேகமாக பதிவு செய்கிறது. இதனால், ஓட்டுனர்களும், பாதசாரிகளும், பள்ளி பஸ்சை உடனடியாக அடையாளம் கண்டு கொள்கின்றனர்.
மஞ்சள் பின்னணியில் கருப்பு எழுத்துகள் மிக தெளிவாக தெரிவதால் பஸ் எண், பள்ளி பெயர் போன்றவற்றை, குறைந்த வெளிச்சத்திலும் எளிதில் படிக்க முடியும்.
இதனால் பள்ளி பஸ்களுக்கு மஞ்சள் நிறம், அமெரிக்கா முழுவதும் கட்டாயமாக்கப்பட்டது. அதையடுத்து கனடா, ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா என, உலகின் பல நாடுகள் இதை பின்பற்றின.
மஞ்சளை விட வேறு எந்த நிறமும் அதன் அளவிற்கு சிறப்பாக இல்லாததால், 85 ஆண்டுகளுக்கும் மேலாக, இதுவே பள்ளி பஸ்களில் இடம் பெற்றுள்ளது.
-வ.முருகன்
