
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, சத்திரிய நாடார் நடுநிலைப் பள்ளியில், 1960ல், 5ம் வகுப்பு படித்தபோது, நான் வசித்த பாப்பாங்குளம் கிராமம் மிகவும் பின்தங்கியிருந்தது. அந்த பகுதியில் மழையே கிடையாது. பஞ்சம் தலைவிரித்தாடியது. பசி, பட்டினி மிகுந்து குடும்ப பொருளாதாரம் பின் தங்கியிருந்தது. வறுமையில் வாடினோம். மதிய உணவுத்திட்டம் துவக்கப்பட்டு இருந்ததால் பள்ளிக்கு தவறாது அனுப்பினர் பெற்றோர்.
வகுப்பில் ஆங்கிலம், கணக்கு பாடங்களில் மிகவும் பின் தங்கியிருந்தேன். கண்டிப்பு காட்டி கற்றுத் தந்து வெற்றி பெற வைத்தனர் ஆசிரியர்கள். பள்ளி ஆண்டு விழாவில், 'அழியாச் செல்வம் கல்வி' என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடக்க இருந்தது. அதில் பங்கேற்க தேர்வானேன். அப்போதைய தமிழக முதல்வர் கு.காமராஜர் முன்னிலையில் பேசி முதல் பரிசும், சான்றிதழும் பெற்றேன்.
அதனால், கடும் பஞ்சம் வாட்டிய போதிலும் இடை நிற்காமல் படிப்பை தொடர முடிந்தது. கல்லுாரியில் சேர வாய்ப்பு கிடைத்தது. தியாக உணர்வுடன் பணியாற்றிய ஆசிரியர்களாலும், பள்ளியில் அமல்படுத்திய மதிய உணவு திட்டத்தாலும் தான் என் போன்றோருக்கு கல்வி சாத்தியமானது.
என் வயது, 72; மத்திய அரசின் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். வாழ்வில் ஏணியாக இருந்து ஏற்றி விட்ட ஆசிரியர்களை நன்றியுடன் போற்றி வாழ்கிறேன்.
- ரா.காசிவிஸ்வநாதன், மதுரை.
தொடர்புக்கு: 95971 14494