
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம், ரகுமானியா மேல்நிலைப் பள்ளியில், 1989ல், 5ம் வகுப்பு படித்த போது உயிர் தோழனாக இருந்தார் பாலசுப்பிரமணியன். வகுப்பு இடைவேளையில் அருகேயிருந்த என் வீட்டிற்கு சென்று, பிஸ்கட், டீ சாப்பிட்டு திரும்புவோம்.
இதை கவனித்து பாராட்டினார் தமிழாசிரியர் அக்பர் அலி. நட்பின் மேன்மையை எடுத்துரைத்து, 'பிற்காலத்தில் இந்த அன்பின் அருமையை உணர்வீர்...' என வாழ்த்தினார்.
பின், மாற்றுப் பள்ளிகளில் சேர்ந்ததால் பிரிந்தோம். விடுமுறை நாட்களில் சந்தித்து மகிழ்ந்தோம். அதுவும் படிப்படியாக குறைந்து நினைவுகளானது. நேரில் காணும் வாய்ப்பு அரிதாகவே அமைந்தது.
சில ஆண்டுகளுக்கு முன், ரேஷன் கடையில் என் குடும்ப அட்டைக்கு மண்ணெண்ணெய் மறுக்கப்பட்டது. வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுக அறிவுரைத்தார் அங்கிருந்த ஊழியர்.
அலைக்கழிக்கப்பட்ட நிலையில் அதிகாரியை சந்திக்க வரிசையில் காத்திருந்தேன். எதிர்பாராத விதமாக என்னை அழைத்தார் அதிகாரி. நெஞ்சில் கை வைத்தபடி, 'நானா...' என நெருங்கியதும் ஆச்சரியம் அடைந்தேன். உயிராய் பழகிய பள்ளி தோழரே அதிகாரியாக இருப்பது கண்டு சிலிர்த்து போனேன். உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றினார்.
தற்போது என் வயது, 43; பள்ளி நாளில் ஏற்பட்ட நட்பு முறிந்து போகும் கிளை அல்ல; மரத்தை தாங்கி நிற்கும் வேர் என்பதை அந்த சம்பவம் புரிய வைத்தது. எங்கள் நட்பை முன் வைத்து, வகுப்பில் தமிழாசிரியர் சொல்லியது மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.
- ஏ.ஜி.முகம்மது தவுபீக், திருநெல்வேலி.