
திருச்சி, திருமழபாடி உயர்நிலைப் பள்ளியில், 1962ல் 10ம் வகுப்பு படித்த போது தலைமையாசிரியராக இருந்தார் பாலசுப்பிரமணியன். லால்குடியிலிருந்து வருவார். ஒவ்வொரு நாளும் மாணவர்களை கண்காணிக்க வகுப்பு வலம் வருவார். கையில் ஒரு முழ நீளத்தில் சின்ன குச்சி வைத்திருப்பார். தண்டனை தருவதற்காக அதை ஒரு போதும் பயன்படுத்தியதில்லை. மாணவர் வளர்ச்சியில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தார்.
ஒவ்வொருவரின் நடவடிக்கையையும் கண்கணித்து...
'கேட்குற கேள்விக்கு வக்கீல் ஆவாய்...'
'அடேய்யப்பா... நீ கலெக்டர் ஆயிடுவாய்...'
இப்படி பேசி நம்பிக்கை தந்து உற்சாகமூட்டுவார். திறமையை கணித்து முன்னேற்றத்துக்கு வழிகாட்டுவார்.
என் கிராமத்துக்கு சென்று வர பேருந்து வசதி இல்லாததால் அவரது வீட்டில் தங்கி பொது தேர்வு எழுத அனுமதித்தார். அன்று என்னைப் பார்த்து, 'தடிப்பயலே... மணி மணியா கையெழுத்து இருக்கு... நல்ல எழுத்தாளரா வருவாய்...' என்றார். அந்த வாக்கு பிற்காலத்தில் பலித்தது.
எனக்கு, 84 வயதாகிறது. பள்ளியில் தொழில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தமிழில் கதை, கட்டுரைகள் எழுதி வருகிறேன். என் எழுத்து பணிக்காக, புத்தக கண்காட்சி அரங்கில், 'திருச்சியின் ஆளுமை' என்ற கவுரவம் பெற்றுள்ளேன். இது போன்ற உயர்வுகளுக்கு வித்திட்ட தலைமையாசிரியரை போற்றி வாழ்கிறேன்.
- கே.ஜெயராமன், திருச்சி.
தொடர்புக்கு: 94433 10440