
அன்று ஞாயிற்றுக்கிழமை!
பள்ளி விடுமுறை என்பதால் கணேஷ், தம்பி முருகவேலுடன் துாங்கினான். விடிந்த பின்னும் படுக்கையை விட்டு எழவில்லை. இருவரும் முறையே, 8, 6ம் வகுப்புகளில் படித்து வந்தனர்.
''காலை 8:00 மணி ஆகிடுச்சு; கடைக்கு வேற போகணும். எழுந்திரு...'' மூத்தவனை எழுப்பினார் அம்மா சகுந்தலா.
சத்தம் கேட்டு எழுந்தவன், ''அப்பா எங்கே காணோம்...'' துாக்கம் கலையாமல் கேட்டான் கணேஷ்.
''இன்னைக்கு கார் ஓட்டும் நேரம் மாறியிருக்காம்; அதனால விடியற்காலையே கிளம்பிட்டாரு...''
படுக்கை அறையில் இருந்து வெளியேறி, முகம் அலம்பி பல் துலக்கியபடி, ''கடையில என்னம்மா வாங்கணும்...'' என்றான் கணேஷ்.
''சிக்கன் வாங்க பணம் கொடுத்து போயிருக்காரு அப்பா... மிதிவண்டியில் போய் வாங்கி வா...''
''சரிம்மா... எடுத்து வர ஒரு பை கொடுங்க...''
''பை எதுக்கு... அதான் கடையில் கறியை, 'கேரிபேக்'கில் போட்டு தானே தருவாங்க; அப்படியே வாங்கி வா...''
''பிளாஸ்டிக் பை உபயோகிக்க கூடாது. ஏதாவது துணிப் பை இருந்தா எடுத்து வாங்க...''
பிடிவாதமாக கேட்டான் கணேஷ்.
''அட ஒண்ணும் புரியாதவனா இருக்குறீ-யே... துணி பையில் வாங்கி வந்தா, அதை யாரு அலசி சுத்தம் செய்யுறது. கேரி பேக்கை பயன்படுத்திய பின் அப்படியே துாக்கி வீசிடலாம்...''
எந்த உணர்வும் இன்றி சொன்னார் அம்மா.
''பையை அலசுறதுக்கு சோம்பல் பட்டு, பிளாஸ்டிக் பை பயன்படுத்துறதால எவ்வளவு தீமை தெரியுமா... பிளாஸ்டிக் மக்கிப் போகாது; மண் வளத்தை நாசமாக்கும்; அத பயன்படுத்துறதாலே சூழலே மாறி வருது... எங்கே பாத்தாலும் பிளாஸ்டிக் குப்பையை பார்க்கிறோமே...''
மகன் பேச்சை கேட்டு உணர்வு பெற்றவர், ''வாஸ்தவம் தான்... உனக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சி எனக்கு இல்லாமல் போய்விட்டதே...'' என்றபடி வேகமாக சமையல் அறைக்குள் சென்றார். அழகிய துணிப் பை ஒன்று எடுத்து வந்து மகனிடம் தந்தார்.
மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றான் கணேஷ்.
பட்டூஸ்... சூழலுக்கு உகந்த துணிப் பைகளை அன்றாடம் உபயோகிக்க உறுதி ஏற்போம்!
- காரைக்குடி ராமமூர்த்தி