
ஈரோடு, கலைமகள் கல்வி நிலையம் பள்ளியில், 1949ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
எழுத்துப் பயிற்சிக்காக, இரட்டை வரி நோட்டு கொண்டு வர சொல்லியிருந்தார் வகுப்பு ஆசிரியை. வீட்டில், பழைய நோட்டு புத்தகத்தில் எழுதாத பக்கங்கள் மிகுதியாக இருந்தன. அவற்றை கிழித்து எடுத்து தொகுத்து நோட்டாக தைத்து தந்தார் என் தந்தை.
அதை எடுத்து சென்றபோது, கோபத்தில் பிரம்பால் அடித்து தண்டித்தார் ஆசிரியை. பின், தலைமை ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் முதலியாரிடம் அனுப்பி வைத்தார்.
ஈரோடு நகராட்சி தலைவராகவும் இருந்த அவர், கதர் ஆடை அணிந்து கண்டிப்புடன் செயல்படுவார். பழந்தமிழ் இலக்கியங்களை நன்கு கற்பிப்பார். அவரது அறை வாசலில் பயத்துடன் நின்றிருந்தேன். மிகுந்த கனிவுடன் அழைத்து விசாரித்தார். அழுதபடியே விபரம் கூறினேன்.
பரிவுடன், 'அழாதே... நாளை வா... புதிய நோட்டு வாங்கி தருகிறேன்...' என்று அனுப்பி வைத்தார்.
மாலையில் வீடு திரும்பியதும், விபரத்தை தந்தையிடம் சொன்னேன். யோசனை செய்தபடி புதிய நோட்டு புத்தகம் வாங்க அப்போதைய பணத்தில், 'ஒன்றரை அணா' கொடுத்தார்.
மறுநாள், தலைமை ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தேன்.
முதுகில் தட்டி உற்சாகம் தந்தபடி, 'படிப்பில் நன்றாக கவனம் செலுத்து...' என்று ஆசி வழங்கினார்.
தற்போது, என் வயது, 84; தந்தையின் மனம் புண்படாத வகையில் அந்த தலைமை ஆசிரியர் நடந்து கொண்ட விதம் புல்லரிக்க வைக்கிறது. அவரது தியாகம் மிக்க உழைப்பால் அந்த பள்ளி இன்றும் நிமிர்ந்து நிற்கிறது.
- சாருமதி பாலகிருஷ்ணன், சென்னை.
தொடர்புக்கு: 93822 43475