
நாகப்பட்டினம், கீவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1956ல், 7ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியராக இருந்தார் ராமநாதன்; மிகவும் கண்டிப்பானவர். சிறு தவறையும் பொறுத்துக் கொள்ள மாட்டார். கடும் கோபத்தில் கை நீட்டி அடித்து தண்டனை தருவார்.
அன்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால் வகுப்பு தோழர்களுடன் கீவளூர் ஆற்றுக்கு சென்றோம்.
ஆழமான பகுதியில் ஆட்டம் போட்டபடி குளித்தோம். நீச்சல் அடித்தபடி கரைக்கு வந்து மீண்டும், குதித்து கும்மாளம் போட்டோம். வகுப்பில் ஆசிரியர் அடித்து தண்டிப்பது பற்றி அப்போது விமர்சனத்துடன் பேசினோம்.
அதே பகுதியில் குளித்துக் கொண்டிருந்த அந்த ஆசிரியர், ஒன்று விடாமல் கேட்டிருக்கிறார். இதை நாங்கள் கவனிக்கவில்லை.
மறுநாள் வகுப்பில், 'ஆற்றில் நேற்று என்ன பேசினாய்...' என கேட்டார். பயந்து நடுங்கியபடி மவுனமாக நின்றேன்.
அடி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தேன். ஆனால், தண்டனை எதுவும் தரவில்லை. விசாரணையுடன் நிறுத்திக் கொண்டார். அன்று முதல், அடித்து தண்டிப்பதை தவிர்த்து விட்டார்.
தற்போது என் வயது, 78; அரசு மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். இப்போது, தனியாக மருத்துவ சேவை செய்து வருகிறேன். வெகுளித்தனமாக இருந்ததால், 'பகலில் பக்கம் பார்த்து பேசு' என்ற பழமொழி பற்றி தெரிந்திருக்கவில்லை. அன்று, ஆசிரியர் நடத்திய விசாரணையில் நடுக்கம் ஏற்பட்ட போது தான் அதை பாடமாக கற்றேன். அந்த நினைவு இன்றும் மனக்கண்ணில் நிழலாடுகிறது.
- ஏ.கிருஷ்ணமூர்த்தி, கடலுார்.
தொடர்புக்கு: 98431 20139