
முன்கதை: சிறுமியர் தியாவும், அனுவும் தோப்பு கிணறு தண்ணீர் குடித்ததால் வினோத சக்தி பெற்றிருந்தனர். காட்டில் சிக்கியிருந்தவர்களை மீட்க முயன்றபோது கும்பலிடம் சிக்கினர். பூஜை நடந்த இடத்தின் அருகே அவர்களின் கண்களை கட்டி அமர வைத்தது கும்பல். இனி -
சிறுமியர் தியா, அனுவால் ஏற்பட்டிருந்த தடங்கல்கள் தீர்ந்ததாக கருதி, காட்டில் பூஜையை ஆரம்பித்தது அந்த கும்பல். பூக்களை எடுத்து, பொம்மை காலடியில் போட்டு அர்ச்சனை செய்தார் இலக்கியன்.
அதேநேரம் கல்வெட்டு பாடலை தடங்கல் இன்றி வாசித்து முடித்தனர் மாணவியர்.
''தேவதையையும், காவல் தெய்வங்களையும், 9 முறை சுற்றி வாருங்கள்...'' இலக்கியனிடம் பணித்த சாமியார், மாணவியரிடம் திரும்பி, ''மூணு சிறுமியரும் போகலாம். உங்க வேலை முடிந்தது. ஓய்வு எடுங்க...'' என்றபடி வானத்தை நோக்கினார்.
இருட்ட ஆரம்பித்த நேரத்தில் கீழ்வானில் பிறை தெரிந்தது.
''மகரயாளி இருக்கிற துாண் பக்கம் தோண்டலாம்... ஐயா முதல்ல கிழக்கு பார்த்து நின்னு மண்வெட்டியால் தோண்டி ஆரம்பிச்சு வைங்க... அப்புறம் மத்தவங்க வேலைய ஆரம்பிக்கலாம்...''
சாமியார் சொன்ன மகரயாளி துாணை அடையாளம் காட்டினார் பூசாரி.
தோண்டும் பணி துவங்கியது.
எல்லாரும் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். மண்வெட்டியும், கடப்பாறையும் தரையில் மோதும் சத்தமும், மண் வாரி வீசப்படும் சத்தமும் கேட்டு கொண்டிருந்தது.
ஐந்தடி ஆழத்திலேயே, 'டடங்...' என்று உலோகத்தில் கடப்பாறை மோதும் சத்தம் கேட்டது. எல்லாரும் பரபரப்பாயினர். ஆர்வத்தின் உச்சிக்கு போனார் இலக்கியன்.
''பூஜை வீண் போகவில்லை; தேவதைகளும், காவல் தெய்வங்களும் கைவிடவில்லை...''
மலர்ச்சியாக சொன்னார் சாமியார்.
''பார்த்து... பார்த்து... மெதுவா மண்வெட்டியால நோண்டி எடுங்க...''
இலக்கியன் உற்சாகமானார்.
அங்கு உலோக பெட்டி தென்பட்டது. சுற்றிலும் தோண்டி மண்ணை அகற்றினர். அதன் மூடியை திறக்கும் முன், ''சந்தனம், குங்குமம் எடுத்து வாங்க...'' என்றார் சாமியார்.
பூசாரி எடுத்து கொடுக்க அதில் திலகமிட்டார்.
''இப்போ திறக்கலாம்...''
திறந்தவர்களுக்கு பேரதிர்ச்சி. அந்த பெட்டி காலியாக இருந்தது.
''என்ன இது... புதையல் எங்கே...''
''பிள்ளைங்க மந்திரம் சொன்னதுல தப்பு நடந்திருக்கு போல ஐயா...''
எல்லாரும் குழப்பமாக இருந்தனர். மெல்ல இலக்கியனை நெருங்கி கிசுகிசுத்தான் செல்வா.
''சார்... ஒருவேளை அந்த தோப்பு கிணத்து பாட்டியோட வேலையா இருக்குமோ... கல்வெட்டை மறைய வெச்ச மாதிரி, பெட்டிக்குள் இருந்த புதையலையும் மறைய வெச்சுருக்குமோ...''
குழப்பத்தில் இருந்த இலக்கியன், கோபத்துடன் மூதாட்டியிடம் வந்தார்.
''கண்கள் இறுக்கமாக கட்டி தானே இருக்கிறது...''
''ஏதாவது மந்திரம் போட்டிருக்கும் சார்...''
'' உள்ளதை சொல்லிடு பாட்டி... இந்த புதையலுக்காக, எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா... சிறுமியரை வெச்சு, கல்வெட்டில் இருக்கிற பழந்தமிழ் பாடலை, 108 முறை உச்சாடனம் செய்து தேவதை, காவல் தெய்வங்களுக்கு மலர் பூஜை செய்திருக்கேன்...
''அப்படி செஞ்சு சாந்தபடுத்தினால் தான், புதையலை எடுக்க முடியும் என்று, செப்பு பட்டயத்தில் எழுதி இருந்தது. இந்த ஊர் பிள்ளைகளை வைத்து முயற்சி செய்தோம். அவர்களால் சரியாக பாடலை உச்சரித்து வாசிக்க முடியவில்லை...
''அதனால் தான், எங்கள் கல்வி நிறுவனத்தில் இருந்து, மூன்று பேரை அழைத்து வந்து சிரமப்பட்டு புதையலை எடுத்தால், கண்ணிமைப்பதற்குள் மறைய வைத்து விட்டாயே...''
கோபமாய் கத்தினார் இலக்கியன்.
அமைதியாக இருந்தார் மூதாட்டி.
''என் புதையலை திரும்ப கொடுத்து விடு...''
கெஞ்சும் குரலில் பேசினார் இலக்கியன்.
''அந்த செப்பு பட்டயம் எத்தனை நுாற்றாண்டுக்கு முந்தியது தெரியுமா... புதையலை பதுக்கிய மன்னனுக்கு பின், எத்தனை பேர் இந்த தேசத்தை ஆண்டனர் தெரியுமா... பின், ஆங்கிலேயர் முகாம் போட்டு வனத்தில் குடியிருப்பு கட்டி, எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது தெரியுமா... இன்னுமா, புதையல் இங்கே இருக்கும் என்று நினைக்கிறாய்...''
சிரித்தார் மூதாட்டி.
''சக்தியால் புதையலை மறைக்கவில்லையா...''
''இருந்தால் தானே மறைப்பதற்கு...''
''அப்போ, நிஜமாகவே புதையல் இல்லையா...''
அதிர்ச்சியுடன் கேட்டு பெட்டி அருகே வந்தார் இலக்கியன்.
தொலைவில் வாகனங்கள் வரும் ஒலி கேட்டது.
''வனத்துறையும், போலீசும் வர்ற மாதிரி தெரியுது சார்...''
பதற்றமாக சொன்னான் செல்வா.
''இந்த இடம் அவங்களுக்கு எப்படி தெரிந்தது...''
கலவர குரலில் கேட்டார் இலக்கியன்.
''நான் தான், 'லைவ் லொகேஷன்' அனுப்பினேன்...''
நிதானமாக சொன்ன வார்டனை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
''செல்வா... இவங்க போனை எல்லாம் பிடுங்க சொன்னேனே...''
''எங்க போனை கேட்டப்பவே, போலீசுக்கு ஷேர் செய்து, வாய்ஸ் மெசேஜ் அனுப்பிட்டேன். சைலன்ட் மூடுல போட்டுத்தான் போனை அவனிடம் கொடுத்தேன்...''
வார்டனின் புத்திசாலித்தனத்தை, தியாவும், அனுவும் வியந்து பார்த்தனர்.
காவல்துறை வாகனங்கள் சுற்றி வளைத்தன. மாணவியரும், வார்டனும் மீட்கப்பட்டனர்.
'தடையுள்ள பகுதியில் என்ன செய்துட்டு இருக்கீங்க...'
விசாரணையை துவக்கினர் அதிகாரிகள்.
''இந்த காலத்திலும், புதையல் ஆசை இருக்கிறதா மிஸ்டர்... நீங்கள் நன்கு படித்து பள்ளி நடத்துபவர் தானே... புதையல் இருந்தால், அது அரசுக்கு சொந்தமானது என்று கூட தெரியாதா...''
அதிகாரி கேட்க, தலை குனிந்தார் இலக்கியன்.
''வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லாரையும் கைது செய்யுங்கள்...'' என்றார் போலீஸ் அதிகாரி.
விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, கைத்தடியை ஊன்றியபடி காட்டில் மறைந்து விட்டார் மூதாட்டி.
கடத்தி வரப்பட்ட மாணவியரும், வார்டனும், தியாவும், அனுவின் வீட்டிற்கு வந்தனர்.
''நம்மை அழைத்து செல்ல வாகனம் வந்து கொண்டிருக்கிறது. அதுவரை, அந்த தோப்பு கிணற்று கதையை சொல்லுங்கள்...'' என ஆர்வமானார் வார்டன்.
''சொல்றது என்ன... ஒருமுறை டெமோ காட்டி விடுகிறோம். பவுர்ணமிக்கு பின் இந்த சக்தி எங்களிடம் இருக்காது. இதைப் பற்றி யாரிடமும் சொல்ல கூடாது...'' என்றாள் தியா.
ஒப்புதலாக தலையசைத்து மகிழ்ச்சியுடன் சிரித்தனர்.
- முற்றும்.
- ஜே.டி.ஆர்.