PUBLISHED ON : டிச 23, 2023

டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் பண்டிகை
உலகம் முழுதும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகம் தருவது கிறிஸ்துமஸ் பண்டிகை. மகிழ்ச்சி புரண்டோடும். பளிச்சிடும் வண்ண விளக்குகள் மின்னும். குழந்தை இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் விதமாக, குடில்கள் நிறைந்திருக்கும்.
பரிசு பொதிகளை சுமந்து அன்பான கிறிஸ்துமஸ் தாத்தாவின் வருகை களைகட்டும். பல வித சுவைகளில், கேக் உணவு வகைகள் அணிவகுத்து நாவில் சுவையை நிரப்பும். அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் உற்சாகம் ஊட்டும். வண்ண மயமாக நட்சத்திரங்கள் ஜொலித்து இனிமை தரும்.
கிறிஸ்துமஸ் பண்டிகையில் முக்கியமாக இடம் பெறுவது, இயேசு பிறந்ததை நினைவூட்டும் குடில். இது பற்றிய விபரம், கிறிஸ்தவ மத புனித நுாலான பைபிள், புதிய ஏற்பாட்டில் மத்தேயு, லுாக்கா நற்செய்தி பகுதிகளில் விவரிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் குறிப்பிட்டு உள்ளது போன்று, கிறிஸ்து பிறப்பு நிகழ்வை சித்தரிக்க அமைப்பது தான் கிறிஸ்துமஸ் குடில். இது கிறிஸ்தவர் வீடு, ஆலயம், பேரங்காடி மற்றும் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.
இதில் குழந்தை இயேசு, அவரது தாய் மரியாள், தந்தை யோசேப்பு, ஆடு மேய்ப்பவர்கள், தேவதுாதர்கள், மூன்று அரசர் உருவங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும். இவற்றோடு, விண்மீன்கள், ஒட்டகம், ஆடு, காளை, கழுதை என விலங்குகளும் இடம் பெறும். உலகம் முழுதும், கிறிஸ்துமஸ் குடில் அமைத்து கிறிஸ்து பிறப்பை காட்சிப்படுத்துவது வழக்கத்தில் உள்ளது.
இது துவங்கிய வரலாற்றை பார்ப்போம்...
பிரான்சிஸ்கன் துறவற சபையை நிறுவிய புனித பிரான்சிஸ் அசிசி தான் முதலில், கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் குடிலை அமைத்து, வித்தியாசமாக கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்காக, ஐரோப்பிய நாடான இத்தாலியில் கிராசியோ என்ற கிராமத்தை தேர்ந்தெடுத்தார். இதன் அருகே மலைப்பகுதியில் இயேசு பிறந்த இடத்தை நினைவூட்டும் விதமாக, குடில் அமைக்கப்பட்டது. அதில் குழந்தை இயேசு பிறப்பு காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, 14ம் நுாற்றாண்டில், இந்த இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் அமைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இந்த ஆலயத்துக்கு ஏராளமான பக்தர்கள் வரத் துவங்கினர். அமெரிக்கா, வட அமெரிக்க நாடான கனடா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகளில் இருந்தும், புனிதப் பயணமாக வருகின்றனர். மனமுருகி பிரார்த்தித்து கொண்டாடி மகிழ்கின்றனர்.
அன்பையும், அமைதியையும் போதித்தவர் இயேசு. அமைதி நிலவ பாடுபட்டார். உலகில் ஒளியாகவும், வாழ்வுக்கு வழியாகவும் திகழ்ந்தார். கருணையாக, நற்பண்பின் உறைவிடமாக வாழ்ந்து வருகிறார்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.
குடில்...
* கிறிஸ்து பிறந்த சூழலை கண் முன் கொண்டு வரும்
* மத்திய ஆசிய பகுதியில் பெத்லகேம் என்ற ஊரை நினைவூட்டும்
* வைக்கோல், காய்ந்த புல், களிமண் பொருட்களால் எளிமையாக தயாரிக்கலாம்
* குடில் அமைத்து அலங்காரம் செய்ய தனியார் நிறுவனங்கள் களத்தில் உள்ளன
* கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.
அமுதன்