
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில், 1999ல், 8ம் வகுப்பு படித்த போது, 'பார்வை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்!' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பேச அறிவுறுத்தினார் வகுப்பாசிரியர்.
புத்தகங்களை வாசித்து குறிப்புகள் எடுத்து உரையை தயாரித்தேன். மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேசும் வாய்ப்பு என்பதால், திரும்ப திரும்ப பயிற்சி எடுத்திருந்தேன்.
நிகழ்ச்சி துவங்கியபோது முன்வரிசையில் உற்சாகமாக அமர்ந்திருந்தேன்.
திடீரென அழைத்த வகுப்பாசிரியர், 'நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேரப் பற்றாக்குறையால் இன்று நீ பேச வாய்ப்பு தர முடியாது...' என்றார்.
செய்வதறியாது நிலைகுலைந்தேன்.
கண் கலங்கியபடி ஓரமாக நின்றதை கண்ட உதவி தலைமை ஆசிரியர் சவுந்தரபாண்டியன், விசாரித்து நிலைமையை அறிந்தார்.
உடனே மேடையில் ஏறி, கலை நிகழ்ச்சிக்கு சிறு இடைவேளை விட்டு, 'மாணவன் சுவாமிநாதன் ஐந்து மணித்துளிகள் பேசுவார்...' என அறிவித்தார்.
மகிழ்வுடன் மேடை ஏறி உரையாற்றினேன். மாவட்ட ஆட்சியர் ராமச்சந்திரன், சிறப்புரை நிகழ்த்திய போது வெகுவாக பாராட்டினார். பத்திரிகைகள் கட்டம் கட்டி வெளியிட்டன. அது பெரும் திருப்பம் ஏற்படுத்தியது. தொடர்ந்து, மாநில அளவில் பேச்சு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றேன்.
எனக்கு, 36 வயதாகிறது. பிரபல நாளிதழில் செய்தியாளர் பணி, மேடைப் பேச்சு, நாவல் எழுத்து என, செயல்பாடுகளால் உயர்ந்துள்ளேன். இந்த புகழ் பயணத்துக்கு அடித்தளம் அமைத்த அந்த உதவி தலைமை ஆசிரியரை வணங்குகிறேன்!
- என்.சுவாமிநாதன், கன்னியாகுமரி.
தொடர்புக்கு: 74013 29409