
விருதுநகர் மாவட்டம், சிவகாசி முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில், 1995ல், 8ம் வகுப்பு படித்தபோது, வகுப்பு ஆசிரியராக இருந்தார் சிக்கந்தர். அன்று, வீட்டு பாடம் எழுதவில்லை என்று நான்கு பேரை வெளியில் நிறுத்தி விட்டார். ஜன்னல் வழியாக வகுப்பறையை வேடிக்கை பார்த்தபடி நின்றோம்.
அப்போது, ரோந்து வந்த தலைமை ஆசிரியர் சுகுமார், விசாரணை செய்வதற்காக அவரது அறைக்கு அழைத்தார். மறுப்பு பேசாமல் உடன் நின்றவர்கள் சென்றனர். நான் மட்டும் வகுப்பறைக்குள் ஓடி ஆசிரியரிடம் ஒப்புதல் கேட்டேன்.
அனுமதி பெற்று சென்ற என்னிடம், 'ஏன்டா... நான் கூப்பிடுகிறேன்... நீ அறைக்குள் ஓடுகிறாய்... ஒளிந்து கொள்ள நினைத்தாயா...' என்றபடி அடித்தார்.
பயந்தபடி, 'ஐயா... நான் ஒளிய ஓடவில்லை... ஆசிரியரிடம் அனுமதி பெற சென்றேன். தவறாக நினைக்காதீர்...' என்றேன்.
அதை ஏற்காமல், 'ஓடியதும் இல்லாமல், பொய் வேறு சொல்கிறாயா...' என்றபடி மீண்டும் விளாசி தண்டித்தார்.
பின், வகுப்புக்கு சென்று ஆசிரியரிடம் விபரம் கூறினேன்.
சிரித்தபடியே, 'அவர் கூப்பிட்டால் உடனே போக வேண்டியது தானே... என்னிடம் எதற்கு அனுமதி கேட்க வந்தாய்...' என்று, கட்டளையின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.
என் வயது, 41; பள்ளியில் நடந்த அந்த நிகழ்வு இன்றும் என் கண்முன் நிழலாடுகிறது. பதவியின் தகுதி அறிந்து உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என, அச்சம்பவத்தில் இருந்து பாடம் கற்றேன்!
- எம்.சரவணகுமார், சிவகாசி.
தொடர்புக்கு: 99944 73565