PUBLISHED ON : டிச 30, 2023

அன்று, காட்டில் மிகப்பெரிய திருவிழா நடக்க இருந்தது. அதை சிங்கராஜாவே தலைமையேற்று நடத்தவிருந்ததால், ஓடியாடி வேலை பார்த்து வந்தன விலங்குகள்.
முதிய குரங்கு வழிக்காட்டுதலில், குரங்கு படை கிளைக்கு கிளை தாவி, காடு முழுதும் தோரணம் கட்டி வந்தன.
யானை கஜாவின் ஆணையை ஏற்று, யானைக் கூட்டம் வழியில் விழுந்து கிடந்த மரங்களையும், காய்ந்த மரக்கிளைகளையும் தும்பிக்கையால் அப்புறப்படுத்தின. காட்டில் கரடு முரடான பகுதி எல்லாம் அழகான பாதைகளாக அமைந்தது.
காட்டின் மற்றொரு பகுதியில், நிறைய மூலிகைச் செடிகள் இருந்தன. அங்கு ஒரு வற்றாத காட்டாறு பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த தண்ணீரின் குளிர்ச்சி யானை கூட்டத்துக்கு மிகவும் பிடிக்கும்; கூட்டத்திலிருந்த குட்டி யானை சந்துரு எப்போதும், தண்ணீரை விட்டு வெளியே வரவே வராது; அதில் ஆட்டம் போடும்.
அதன் நண்பன் குட்டி முயல் புஜ்ஜி.
புஜ்ஜியின் குடும்பம் வேறொரு காட்டிலிருந்து, ஆறு மாதத்துக்கு முன் வந்திருந்தது. திருவிழா என்பதால், விலங்குகள் எல்லாம் வேலை செய்து வந்தன. யானை குட்டி மட்டும் வழக்கம் போல் தண்ணீரில் ஆடிக் கொண்டிருந்தது.
மரக்கிளைகளை எல்லாம் அப்புறப்படுத்தி, பாதை அமைத்த யானைக் கூட்டம், காட்டாற்றிலிருந்து தண்ணீரை உறிஞ்சி வந்து, வழியெங்கும் பீய்ச்சியடித்து பாதையை செப்பம் செய்தன.
மான்களும், முயல்களும் அங்கு வந்தன; அவற்றுடன் வந்த குட்டி முயல் புஜ்ஜி, 'நண்பர்களே... எங்களுக்கும் ஏதாவது வேலை கொடுங்கள்...' என்று சுட்டியாக கேட்டது.
'பூக்களால் பாதையை அலங்கரியுங்கள்...' என்றது மயில்.
உற்சாகமாக தாவி குதித்து, பூக்களை சேகரிக்க ஆரம்பித்தன.
குட்டி முயல் புஜ்ஜி அக்கம் பக்கம் கவலையுடன் எட்டி பார்த்தபடி இருந்தது. நண்பன் குட்டி யானை, 'சந்துரு வரேன்னு சொன்னானே... இன்னும் காணுமே' என்று எண்ணியது.
எல்லாம் பூக்களை சேகரிப்பதில் ஆர்வத்துடன் இருந்தன.
குட்டி முயல் புஜ்ஜி மட்டும் குதித்து, காட்டாற்றுக்கு சென்றது.
'எப்படியும் சந்துரு அங்கே தான் இருக்கும்' என்று நினைத்தது. அதன் எண்ணம் பொய்யானது; இயன்ற வரை தேடிப் பார்த்தது. ஏமாற்றமும், கவலையும் தான் மிஞ்சியது. சற்று துாரம் நடந்து சென்று தேடியது.
காட்டு வழியில் சந்துருவை துன்புறுத்தி சிலர் இழுத்துச் செல்வதை கண்டு, 'ஐயோ நண்பா... சந்துரு...' என்று அலறியது.
சந்துருவின் தும்பிக்கையை சுருட்டி கட்டியிருந்தான் வேட்டைக்காரன்.
அதை பார்த்த புஜ்ஜி கோபம் மேலோங்க, 'என் நண்பனையா இழுத்துட்டு போற... உன்னை என்ன செய்றேன் பாரு...' என்றபடி கோபமாக ஓடியது.
பின் சற்று நிதானமாக யோசித்தபடி, 'வேட்டைக்காரனுடன் சண்டைக்கு சென்றால், என்னையும் பிடித்து கறி சமைத்து சாப்பிட்டு விடுவான்; வேறு வழியில் தான் மடக்க வேண்டும்' என்று எண்ணியது.
பின் வேகமாக, சிங்கராஜாவின் குகைக்கு சென்றது.
அந்த குகை கோலாகலமாக காட்சியளித்தது.
பிடறியில் பொன்னிற மயிருடன் மகிழ்ச்சியுடன் காணப்பட்டது சிங்கராஜா.
அதை குஷிப்படுத்த பாடிக் கொண்டிருந்தன குயில்கள்; அதற்கேற்ப அசைந்து ஆடிக்கொண்டிருந்தன மயில்கள். அப்போது, தாவி குதித்து உள்ளே சென்றது குட்டி முயல்.
அதை பார்த்ததும் குயில்கள் பாட்டை நிறுத்த, மயில்களும் ஆட்டத்தை நிறுத்தின.
சிங்கராஜா முன் வந்து நின்ற குட்டி முயல், 'என் பெயர் புஜ்ஜி; இந்த காட்டின் தெற்குப் பகுதியில் இருக்கேன்...' என்று தைரியமாக அறிமுகம் செய்தது.
'என் குகைக்கு தனியாக வந்ததும் இல்லாமல், அச்சம் இன்றி, அறிமுகம் வேறு செய்து கொள்கிறது. பரவாயில்லையே குட்டி முயல்' என எண்ணியபடி பார்த்தது சிங்கராஜா.
'சொல்லு புஜ்ஜி. என்ன வேணும்; உண்ண பழங்கள் தரவா...'
'அதெல்லாம் வேண்டாம். பெரிய திருவிழா நடக்க இருக்கும் நேரத்தில், காட்டில் ஒரு அநியாயம் நடக்கிறது; அதை சொல்லத்தான் ஓடி வந்தேன்...'
'என்னது... அநியாயமா... தெளிவாக சொல்லு...'
'என் நண்பன் குட்டி யானை சந்துருவை காப்பாத்தணும்...'
'யாரு சந்துரு... என்ன ஆச்சு...'
'இன்று திருவிழா என்பதால், விலங்குகள் வேலையில் மூழ்கியுள்ளன; இதுதான் சரியான நேரம் என கருதி, வேட்டைக்காரன் குட்டி யானையை இழுத்து செல்கிறான். நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்...' என்று கண்ணீரோடு முறையிட்டது குட்டி முயல்.
சிங்கராஜாவுக்கு, பெரும் கோபம் வந்தது.
குகையிலிருந்து வெளியே வந்து கர்ஜித்தது.
அதை கேட்டதும் ஓடி வந்தன விலங்குகள்.
'புறப்படுங்கள்... சந்துருவை மீட்டு வாருங்கள்...'
ஆணையிட்டது சிங்கராஜா.
அனைத்து விலங்குகளும் ஓடின.
சிறிது நேரத்தில், குட்டி யானை மீட்கப்பட்டது.
அது சிங்கராஜாவிடம் வந்து சேர்ந்தது.
தும்பிக்கை கட்டை கடித்து விடுவித்தது எலி.
சுதந்திரமான தும்பிக்கையை மேலும், கீழும் அசைத்து மகிழ்ச்சியை தெரிவித்தது சந்துரு.
மகிழ்ச்சியுடன் ஓடிச்சென்று அதன் மேல் தாவி ஏறியது புஜ்ஜி.
இரண்டும் சிங்கராஜாவை வணங்கி நன்றி தெரிவித்தன.
உற்சாகமாக திருவிழாவுக்கு தயாராகின விலங்குகள்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று காடு அதிர்ந்தது.
குழந்தைகளே... சமயோசித புத்தியும், தைரியமும், தெளிவான முடிவும் தான், சரியான நேரத்தில் குட்டி யானையை காப்பாற்றியது. நாமும் அது போல வாழ்ந்து பழகணும்!