
கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்திருந்தது. மக்கள் சற்று ஆசுவாசமாக மூச்சு விட்டனர். பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கியிருக்கவில்லை. இணைய வழியில் நடந்தன.
கண்ணனும், முரளியும் அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படித்தனர்.
ஆன்லைன் வகுப்பு நடக்கும் போது அலைபேசியில், 'கேம்ஸ்' விளையாடுவதை வழக்கமாக்கியிருந்தனர்.
பல நேரம் வகுப்பை, 'கட்' செய்து, ஊர் சுற்ற போவதும் உண்டு.
அன்று, பிள்ளையார் கோவில் ஆலமரத்தடிக்கு வந்தனர்.
''ஏன்டா... சோகமாக இருக்கிறாய்...''
கேட்டான் கண்ணன்.
''அலைபேசியில், 'சார்ஜ்' போடாமல் வந்துட்டேன்...''
வருத்தத்துடன் சொன்னான் முரளி.
''இப்போ என்ன செய்வது...''
''கடைத்தெரு பக்கம் வேடிக்கை பார்த்து வரலாம்...''
இருவரும் நடக்க துவங்கினர்.
''நமக்காக தான், ஆசிரியர் கஷ்டப்பட்டு ஆன்லைன் வகுப்பு எடுக்கிறார். பல நேரம் வீட்டுக்கு நேரில் வந்து பாடம் சொல்லி கொடுக்கிறார்; அதை உணராமல், வகுப்பை புறக்கணிப்பது சரியா...'' என்றான் கண்ணன்.
''ஏதோ நாம மட்டும் தான், இதை செய்றோமா... சக மாணவர்கள் ஆன்லைன் வகுப்புக்கு தவறாமல் செல்வது போல் பேசுறீயே...'' என்று அலட்சியமாக கூறினான் முரளி.
கடைத்தெருவை நெருங்கினர்.
எதிரில் வேகமாக ஓடி வந்தனர் சில மாணவர்களும், ஆசிரியர்களும்.
திகைத்தபடி, 'ஏன்... இப்படி ஓடுகிறீர்கள்...' என்றனர்.
''அறிவியல் ஆசிரியர் மயக்கம் போட்டு விழுந்துட்டார். அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்...'' என நகர்ந்தான் ஒரு மாணவன்.
அவனை தொடர்ந்து மருத்துவமனை நோக்கி சென்றனர்.
அறிவியல் ஆசிரியர் தனசேகரனை சுற்றி ஆசிரியர்களும், மாணவர்களும் சோகத்தில் நின்றனர். ஆசிரியரை பரிசோதித்தார் மருத்துவர்.
''நோயாளியின் உறவினர்கள் யாராவது உள்ளனரா...'' என கேட்டார் மருத்துவர்.
''ஐயா... நான், அவரோட மனைவி...'' என தயங்கியபடி முன் வந்தார்.
''ஏம்மா... வேளாவேளைக்கு சாப்பாடு கொடுக்கிறது இல்லையா... உடம்பில் சக்தியே இல்லை...'' என டிரிப் ஏற்ற கூறினார் மருத்துவர்.
''எப்போ பார்த்தாலும் கணினி முன் அமர்ந்து ஆன்லைன் வகுப்பு... போதாத குறைக்கு மாணவர்கள் வீட்டுக்கு சென்று, வகுப்பு எடுப்பதால் உணவை மறந்து வாழ்கிறார்...''
கண்ணீரோடு ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார் ஆசிரியரின் மனைவி.
திகைத்தபடி வெளியே வந்தனர் கண்ணனும், முரளியும்.
''மிகவும் கவலையா இருக்குடா...'' என்றான் முரளி.
''நம்ம படிப்பு கெட்டுற கூடாதுன்னு எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இருக்கிறார். செய்த நற்செயலை புரிந்து கொள்ளாமல் ஊர் சுத்திட்டு இருக்கோம்...'' என வருந்தினான் கண்ணன்.
''இனி, ஒழுங்காக ஆசிரியர்கள் சொல்றதை கேட்டு வகுப்புகளுக்கு தவறாமல் செல்லணும்...''
உறுதியுடன் கூறினான் முரளி.
அதை ஆமோதித்து வீட்டை நோக்கி நடந்தனர். அதில் புது உத்வேகம் தெரிந்தது.
குழந்தைகளே... இளமையில் கற்பதில் கவனம் செலுத்தினால், எதிர்காலம் சீரும் சிறப்புடன் அமையும்!
- வே.சுந்தரம்