
வாசலில் பைக்கை நிறுத்தி, வீட்டுக்குள் நுழைந்தார் குமரேசன்.
யாரோ கை தட்டி அழைக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தார்.
அமைதியின்றி நின்றிருந்தான் பக்கத்து வீட்டில் வசிக்கும் தண்டபாணி.
ஒன்றும் புரியாமல் அருகில் சென்றார் குமரேசன்.
''இப்போ தான் வீட்டுக்கு வர்றீங்களா...''
கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தார்.
''தாமதம் இல்லையே... சொல்ல போனா, 10 நிமிடம் முன்னதாகவே வந்திருக்கேன்...''
''ஒண்ணும் இல்லை...'' என, பூடகம் போட்டபடி, ''என் மகனோட கணக்கு பரீட்சை ரிசல்ட் வந்துடுச்சு; அவன், 90 மதிப்பெண் எடுத்திருக்கான்...'' என பெருமையடித்தான்.
''ஓ... அப்படியா வாழ்த்துகள்...''
மகிழ்ச்சியுடன் கூறினார் குமரேசன்.
''உங்க மகன் தான் பாவம். சரி, நீங்க வீட்டுக்கு போங்க; அலுப்பா இருப்பீங்க...''
எதையோ சொல்ல வந்து, குறும்பாக நிறுத்தினான் தண்டபாணி.
எதுவும் புரியாமல் வீட்டுக்குள் நுழைந்தார்.
அதிகம் பேசி கொள்ளாதவன் தண்டபாணி. அன்று, வலுக்கட்டாயமாக அழைத்து பேசியதால் ஏதோ நடந்திருப்பதை ஊகித்தார் குமரேசன்.
வீடு நிசப்தமாக இருந்தது. அவரது தந்தை தனியாக, 'செஸ்' ஆடிக் கொண்டிருந்தார்.
குமரேசனை நிமிர்ந்து பார்த்து, ''அலுவலகம் முடிஞ்சுதா. சஷ்டிக்கு எல்லாரும் முருகன் கோவிலுக்கு போயிருக்காங்க... வர்ற நேரம் தான். ப்ரகதீஸ், பள்ளி பிராஜக்ட்டுக்கு பொருள் வாங்க போயிருக்கான்...'' என்றார்.
''அப்பா... அவனோட வகுப்பில் ஏதாவது விசேஷமா...''
வினவினார் குமரேசன்.
''கணக்கு பரீட்சை பேப்பர் தந்திருக்காங்க...''
இழுத்தார் சொக்கலிங்கம்.
''எவ்வளவு மதிப்பெண் வாங்கியிருக்கான்...''
''அது வந்து... அளவா தான் வாங்கியிருக்கான்...''
தயங்கியவரிடம், ''எவ்வளவுன்னு சொல்லுங்க. நானும் தெரிஞ்சுக்கிறேன்...'' என்றார்.
''அது, 52 மதிப்பெண் வாங்கியிருக்கான்...''
அதிர்ந்து நின்றார் குமரேசன். இப்போ தான் புரிந்தது.
''பக்கத்து வீட்டு தண்டபாணி மகன் ஸ்ரீராம் எத்தனை மதிப்பெண் வாங்கியிருக்கான் தெரியுமா...''
''அதை ஏன் கேட்குற...''
''ப்ரகதீஸ் நல்லா படிக்கிறவனாச்சே... மதிப்பெண் குறைவாயிருக்கே...''
கோபத்துடன் பார்த்த அப்பா, ''இப்போ என்ன பிரச்னை. உன் மகன் குறைவான மதிப்பெண் எடுத்ததா... அல்லது அந்த ஸ்ரீராம் கூடுதல் மதிப்பெண் எடுத்திருப்பதா...''
''சுமாராக படிக்கிற ஸ்ரீராம், நல்ல மதிப்பெண் வாங்கி இருக்கும் போது, நல்லா படிக்கிற ப்ரகதீஸ் எவ்வளவு எடுத்திருக்கணும்; ஏன் தவற விட்டான். எல்லாம் அலட்சியம்; வரட்டும் முதுகுல ரெண்டு போட்டா தான் புரியும்; பொறுப்பு வேணாம்...''
அதிர்ச்சியுடன், ''சற்று பொறு... அந்த ஸ்ரீராம் எப்படி மதிப்பெண் எடுத்தான்னு உனக்கு தெரியுமா... படிக்க பயந்து, பதில்களை துண்டு தாளில் எழுதி, ஆசிரியருக்கு தெரியாமல் காப்பி அடிச்சிருக்கான்...''
''என்ன சொல்றீங்க...''
''ஆமா... நம்ம ப்ரகதீஸ் இதை பார்த்து இருக்கான். இதை அவனே சொன்னான்; உண்மையில் அன்று பரீட்சை கஷ்டமா இருந்ததாம். குறைந்த மதிப்பெண் தான் வரும்ன்னு அன்றே புலம்பினான்; அடுத்தமுறை பார்த்துக்கலாம் என ஆறுதல் சொன்னேன்...''
''ஓ... இவ்வளவு நடந்திருக்கா...''
''அவசரப்பட்டு தண்டபாணி மகனோடு, ப்ரகதீசை ஒப்பிட்டு பேசாதே... அவன் நல்ல மனுசனா வளரணுமே தவிர, தவறான வழியில் முன்னேறலாம் என்ற எண்ணம் வந்துடக் கூடாது; புரியுதா...''
''சரிப்பா...''
உண்மை அறிந்து தலையசைத்தார் குமரேசன்.
குழந்தைகளே... உழைக்காமல் குறுக்கு வழியில் முன்னேற முயலக் கூடாது. நேர்மையும், சத்தியமும் எப்போதும் துணை நிற்கும்.
நா.நித்யா