
திருச்சி, புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில், 1970ல், 7ம் வகுப்பு படித்த போது எழுத்துக்களை பிழையின்றியும், சொற்றொடர்களை பொருள் உணர்ந்தும் உச்சரிக்க பயிற்சி பெற்றிருந்தேன்.
என் திறன் கண்ட தமிழாசிரியர் திரவியம், அகில இந்திய வானொலி நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு ஒலிபரப்பாகிய, 'மணிமலர்' என்ற சிறுவர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்று தந்தார். அவர் எழுதிய வானொளி நாடகத்தில், முக்கிய கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்து வந்தேன்.
கல்லுாரியில், எம்.ஏ., பட்டப்படிப்பு முடித்ததும், வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராக சேர்ந்தேன். பின், உதவி நிகழ்ச்சி தயாரிப்பாளராக உயர்வு பெற்றேன். வானொலியில், 200க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளேன். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடியோ விளம்பரங்களில் குரல் தந்துள்ளேன்.
மத்திய அரசு வழங்கிய ஆகாஷ்வாணி விருது, தமிழ்நாடு கல்சுரல் அகாடமி வழங்கிய, சிறந்த பின்னணிக் குரல் விருது பெற்றுள்ளேன்.
எனக்கு, 65 வயதாகிறது; மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், 16 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். தனியார், 'டிவி' செய்தி சேனல் நிகழ்ச்சியில் என் குரல் இடம் பெற்று வருகிறது. இதுபோல் பெருமைகளை பெற துாண்டுதலாக இருந்த அந்த தமிழாசிரியர் பொற்பாதங்களில் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
- ஜோசப் டி.டிசவுசா, மதுரை.
தொடர்புக்கு: 98421 95306