
சென்னை, கே.கே.நகர், தாய் சத்யா மெட்ரிக் பள்ளியில், 2020ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
பள்ளி ஆண்டு விழாவில், நடனம், நாடகம் என, கலை நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்வேன். இதனால், ஆங்கில ஆசிரியை ராதாமணிக்கு, என்னை மிகவும் பிடிக்கும்.
அவ்வப்போது, 'நன்றாக படித்து, அதிக மதிப்பெண் பெற்றால், புது துணி வாங்கி தருவேன்...' என்று ஊக்குவிப்பார்.
ஒருநாள், பள்ளியில் நுழைந்த போது கண்காணித்தபடி வாசலில் அமர்ந்திருந்தார் அந்த ஆசிரியை. என்னை பார்த்ததும், 'பொட்டு வைக்காமல் வந்து விட்டாயே...' என்று கண்டித்தார்.
பின், கைப்பையில் இருந்து எடுத்து கொடுத்து, 'பெண்ணின் முக அழகே பொட்டு தான். தவறாமல் வைத்துக்கொள்...' என அறிவுரைத்தார்.
தற்போது, என் வயது, 19; பொறியியல் கல்லுாரியில், கணினி அறிவியல் படிக்கிறேன். இப்போதும் அலைபேசியில் அழைத்து அறிவுரைத்து உற்சாகப்படுத்துகிறார் அந்த ஆசிரியை. நெற்றியில் பொட்டு வைக்கும் போதெல்லாம், அவர் நினைவில் மூழ்கி விடுகிறேன்.
- அ.யாழினி பர்வதம், சென்னை.