
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி, கழக உயர்நிலைப் பள்ளியில், 1963ல், 9ம் வகுப்பில் படித்த போது, கணித ஆசிரியர் எஸ்.டி.திருவேங்கடம் புதிதாக பணியில் சேர்ந்திருந்தார். சிறப்பாக பாடம் நடத்துவார்.
கூச்ச சுபாவம் உடைய நான் ஆசிரியர்களுடன் நெருங்கி பழக மாட்டேன். கணித பாடத்தை மிகவும் ஆர்வமாக படிப்பேன். காலாண்டில், கணித பாட தேர்வு முடிந்திருந்தது. அன்று, சமூக அறிவியல் தேர்வு எழுதி கொண்டு இருந்தேன்.
ஒவ்வொரு அறையாக, என் பெயரை சொல்லி தேடி வந்தார் கணித ஆசிரியர்; எதுவும் புரியாமல் எழுந்து நின்றேன். என்னருகில் வந்து, 'இத்தனை நாளாக உன்னை கவனிக்காமல் இருந்து விட்டேன்... கணித தேர்வில், வகுப்பில் முதல் மாணவன் நீ தான்...' என பாராட்டினார்.
மகிழ்ச்சி கரை புரண்டது. அன்று முதல், அவரது செல்ல பிள்ளையானேன். படிப்பை சிறப்பாக முடித்து, பின்னாளில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். மாவட்ட கல்வி அலுவலராக உயர்ந்திருந்த அந்த ஆசிரியர், எங்கு பார்த்தாலும், இந்த நிகழ்வை நினைவு படுத்துவார்.
என் வயது, 74; பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். இன்றும், அந்த ஆசிரியர் நினைவை மனதில் தாங்கி உள்ளேன். அவரது நலத்துக்காக பிரார்த்தனை செய்து வருகிறேன்.
- கி.வைத்தியநாதன், சென்னை.
தொடர்புக்கு: 98405 26462