/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
மக்களால்... மக்களுக்காக... மக்களே அமைத்த குடியரசு!
/
மக்களால்... மக்களுக்காக... மக்களே அமைத்த குடியரசு!
மக்களால்... மக்களுக்காக... மக்களே அமைத்த குடியரசு!
மக்களால்... மக்களுக்காக... மக்களே அமைத்த குடியரசு!
PUBLISHED ON : ஜன 20, 2024

ஜன., 26 குடியரசு தினம்
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக ராஜாஜி என்ற ராஜகோபாலாச்சாரி பொறுப்பு வகித்தார். அப்போது, நம் நாட்டுக்கென தனியாக அரசியல் நிர்ணய சட்டம் இல்லை. பின், டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழு, தனி அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியது.
மக்களை, மக்களே ஆளும் நடைமுறை தான் அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு. இதைத்தான், 'குடியரசு' என்கின்றனர். தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்டம், 1929ல் தீவிரம் அடைந்திருந்தது. முழு சுயராஜ்யம் அதாவது, சுதந்திர இந்தியாவை அடைந்து விட்டோம் என, தீர்மானம் நிறைவேற்றியது இந்திய தேசிய காங்கிரஸ். இது, பகிரங்கமாக ஜன., 26, 1930ல் அறிவிக்கப்பட்டது. அதாவது, அன்னியரை விரட்டி நம்மை நாமே ஆள்வது என்பதே இதன் பொருள்.
பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் முறையாக, 1947ல் நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதை தொடர்ந்து அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. சுதந்திர போராட்டத்தின் போது, முழு சுயராஜ்யம் என அறிவித்திருந்த ஜனவரி 26ம் நாளிலேயே அரசியல் சட்டத்தை அமல் படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நம்நாடு குடியரசு என, ஜனவரி 26, 1950, காலை, 10:18 மணிக்கு அறிவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் அன்று காலை, 10:24 மணிக்கு பதவியேற்றார். அப்போது, குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்பட்டது.
அன்று பிற்பகல், 2:30 மணிக்கு குடியரசுத் தலைவரை ஏற்றிய கார், அரசு மாளிகையில் இருந்து புறப்பட்டது. டில்லி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலமாக வந்து இர்வின் மைதானத்தை அடைந்தது. அங்கு, ஆறு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஏறி பவனி வந்தார் குடியரசு தலைவர்.
படை வீரர்கள் முன் செல்ல நடந்த இந்த அணி வகுப்பை, 15 ஆயிரம் பேர் கண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பின், தேசியக்கொடி ஏற்றினார் குடியரசு தலைவர். அந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷிய அதிபர் சுகர்னோ பங்கேற்றார். அந்த வழக்கமே குடியரசு தினத்தில் இன்றும் தொடர்கிறது. குடியரசு தலைவராக தற்போது, திரவுபதி முர்மு பதவி வகிக்கிறார். அவருக்கு, தனித்தன்மையுள்ள அதிகாரங்கள் உள்ளன.
நாம் தேர்ந்தெடுக்கும் எம்.பி., என்ற பார்லிமென்ட் உறுப்பினர்கள் கொண்ட அவையே சட்டம் இயற்றுகிறது. எம்.பி.,களை தேர்வு செய்ய ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. வெற்றி பெற்ற உறுப்பினர்கள், பிரதமரை தேர்வு செய்கின்றனர். அமைச்சர்களை பிரதமர் நியமிப்பார். இவர்களுக்கு, குடியரசு தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
இந்தியா, குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின், முதல் பார்லிமென்ட் தேர்தல், அக்டோபர் 25, 1951 முதல், பிப்ரவரி 21, 1952 வரை பல கட்டங்களாக நடத்தப்பட்டது. அப்போது, நம் நாட்டின் மக்கள் தொகை, 36 கோடி. இதில் ஓட்டு போட, 17.32 கோடி பேர் தகுதி பெற்றிருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்று, ஜவஹர்லால் நேரு முதல் பிரதமரானார்.
இந்தியா பழம்பெருமை மிக்க நாடு. பன்முக பண்பாடு, கலாசாரங்களை உள்ளடக்கியது. அதன் புதல்வர்களான நாம், இதை மனதில் பதித்து ஒற்றுமையுடன் வாழ உறுதியெடுப்போம். குடியாட்சியின் பொருளை உணர்ந்து நாட்டை சிறப்படைய செய்வோம்.
- தி.செல்லப்பா